காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தை முக்கொம்பில் தொடங்கினார் ஸ்டாலின்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி முக்கொம்பிலிருந்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

காவிரி உரிமை மீட்புப் பேரணியை மேற்கொள்வதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த ஸ்டாலினை தெற்கு மாவட்டச் செயலாளரும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நேரு தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான தலைமை செயற்குழு உறுப்பினருமான சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி உட்பட திரளானோர் வரவேற்றனர்.

வழக்கத்துக்கு மாறாகப் பச்சைத்துண்டுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ஸ்டாலின், திருச்சி சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுக்கிறார். சரியாக இன்று மாலை 4 மணியளவில் திருச்சி காவிரிக் கரையின் முக்கொம்பில் கொடியேற்றத்தைத் தொடங்கி வைக்கும் ஸ்டாலின் நடைப்பயணத்தைத் தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து கம்பரம்பேட்டை, சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட், சர்க்கார்பாளையம், ஒட்டக்குடி, கீழ முல்லைக்குடி, புத்தாவரம், வேங்கூர் பூசத்துறை வழியாகக் கல்லணை அமைந்துள்ள தோகூரில் இன்றைய பேரணி முடிகிறது. தொடர்ந்து அங்கு இரவு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார். அந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச உள்ளார்கள். இந்தப் பயணம் 13-ம் தேதி கடலூரில் முடிவடைகிறது.