முக்கிய செய்திகள்

காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு ..

, தமிழ்நாடு அரசு கோரியபடி, காவிரியில், 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இதனை ஏற்று காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடியுள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் விவாதப் பொருள் நிரலில் மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்டதற்கு தமிழ்நாடு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேகதாது அணைத் திட்டம் குறித்து வழக்கு உள்ளதால், அதுகுறித்து இனிவரும் கூட்டங்களில் விவாதிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

குறுவை சாகுபடிக்கு ஏதுவாக ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மே மாதம் முடிவதற்குள் வழங்க வேண்டிய 2 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தமிழகத்தின் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் எடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்ற கர்நாடகம் தெரிவித்தது.
இந்த கூட்டத்தின் இறுதியில், தமிழ்நாட்டிற்கு, காவிரியில், ஜூன் மாதத்திற்குரிய 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைனும், அந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

காவிரியில் 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை, கர்நாடகாவும் ஏற்றுக் கொண்டதாகவும், மசூத் உசேன் தெரிவித்தார்.

ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே, காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், கட்டாயம், காவிரியில், கர்நாடகம், 9.2 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டும் என்றார்.

மேகதாது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்தார்.