முக்கிய செய்திகள்

கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

கடந்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வீசிய கஜா புயலால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேதம் குறித்த இடைக்கால கணக்கீட்டை வழங்கினார். இதையடுத்து, தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் கடந்த மாதம் 23 ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பல துறைகள் அடங்கிய மத்தியக் குழு புயல் சேதத்தை ஆய்வு செய்தது.

அதன் இடைக்கால அறிக்கையின் படி, இரண்டாவது முறையாக இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண் நிதியில் இருந்து மத்திய அரசின் பங்காக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்தியக் குழுவின் இறுதி ஆய்வறிக்கையின் படி, தேசிய பேரிடர் மேலாண் நிதியில் இருந்து கூடுதல் உதவி வழங்கப்படும் எனவும், புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும்  மத்திய அரசு உறுதியளித்துள்ளது.