முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கும் தீர்மான நோட்டீஸ்: வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்..


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவை யில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும்படி காங்கிரஸ் தலைமையிலான 7 கட்சிகள் அடங்கிய குழு அளித்த நோட்டீஸை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 7 கட்சிகள் அடங்கிய குழு, மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவை நேற்று சந்தித்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான இக்குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை வழங்கியது.

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதுதான்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2 தினங்களில் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதிக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளை தெரிவித்து பதவி நீக்கம் கோரப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்த திரிண மூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தற்போது ஆதரவு தெரிவிக்காமல் பின்வாங்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தமனுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், அபிஷேக் மனு சிங்வி கையெழுத்திடவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 124(4)-ன் படி, நீதிபதி ஒருவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தி பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்பே நீக்க முடியும்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவை யில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும்படி காங்கிரஸ் தலைமையிலான 7 கட்சிகள் அடங்கிய குழு அளித்த நோட்டீஸை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

எதிர்கட்சிகள் அளித்த தீர்மான நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசித்ததாக வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். தீர்மான விவரங்களை முன்கூட்டியே வெளியிட்டது தவறனா நடைமுறை என சட்ட நிபுணர்கள் தெரிவித்ததால் தீர்மான நோட்டீஸை நிராகரிப்பதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.