தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையிலிருந்து முன்னாள் பெண் ஊழியர் திடீர் விலகல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் குற்றம்சுமத்திய நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தன்னால் விசாரணையில் ஆஜராக முடியாது என்று விலகுவதாக திடீர் முடிவெடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி போப்டே தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் போப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர், இந்த விசாரணை வெளி உலகிற்கு எந்த விஷயமும் கசியாத வண்ணம் ரகசிய விசாரணையாக ஒருமுறை நடைபெற்றது.

புகார்தாரர் அவரது வழக்கறிஞரைக் கூட அருகில் வைத்துக் கொள்ள நீதிபதிகள் குழு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் தன்னுடன் வழக்கறிஞர் விசாரணையில் இருப்பதையும் உதவி நபர் இருப்பதையும் நீதிபதிகள் குழு மறுத்து விட்டனர்.

இதனால் விசாரணையை எதிர்கொள்ள தனக்கு அச்சமாக இருந்தது என்றும் தனக்கு காது சரியாகக் கேட்காததால் தன்னால் நீதிபதி போப்டே கோர்ட் அதிகாரிக்கு தன்னுடைய வாக்குமூலமாக என்னவற்றைக் கூறினார் என்பதும் தன்னால் பின் தொடர முடியாததாக இருந்தது என்று தனது செய்தியாளர்களுக்கான அறிக்கையில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று நான் கமிட்டியின் விசாரணை நடைமுறைகளைப் புறக்கணித்து வெளியேறினேன். ஏனெனில் விசாரணைக் கமிட்டி இது சாதாரண புகார் அல்ல, பதவியிலிருக்கும் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் என்பதை கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

இதில் நியாயமும் சமத்துவமும் கொண்ட நடைமுறை அவசியம், அதுவும் நான் இப்போது உள்ள சமத்துவமற்ற இடத்திலிருந்து இதை நான் வற்புறுத்த வேண்டியுள்ளது” என்று தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும், நீதிபதிகள் குழு தன்னிடம், இது ரகசிய விசாரணையும் அல்ல, விசாகா கமிட்டி வழிகாட்டுதலின் படியான விசாரணையும் அல்ல,

இது இன்ஃபார்மல் விசாரணை நடைமுறைதான் என்று தன்னிடம் கூறியதாகவும், விசாரணை நடைமுறைகளை ஊடகங்களுக்கோ தன் வழக்கறிஞர் விருந்தா கோவருக்கோ தெரிவிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அந்தபெண் ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.

“இவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்பது என்னவெனில் நான் ஏன் இந்தப் புகாரை இவ்வளவு தாமதமாக அளித்தேன்  என்பதாகவே இருக்கிறது.

மேலும் எனது தொலைபேசி அழைப்பு தரவுகள், வாட்ஸ் அப், மற்றும் பிற உரையாடல் ரெக்கார்டுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டனர். ஏப்ரல் 30ம் தேதி விண்ணப்பம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நான் ஏற்கெனவே பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையான விசாரணையாக நடைபெற வேண்டும் என்று கோரியிருந்தேன்.

இந்த கமிட்டியின் மூலம் எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் கருதவில்லை. ஆகவே இந்த 3 நீதிபதிகள் கமிட்டியின் முன் நான் ஆஜராகப்போவதில்லை”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்..