முக்கிய செய்திகள்

4வது நாளாக தொடரும் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் ..


போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று 4வது நாளாக நீடித்து வரும் நிலையில், குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் 3,100க்கும் மேற்பட்ட பேருந்துகளில், நேற்று 1,040 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து திருவண்ணாமலை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும், தற்காலிக பணியாளர்கள் மூலம் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பற்றாக்குறையை சரிசெய்ய தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில், 19 பணிமனைகளில் உள்ள 1,250 பேருந்துகளில், நேற்று 250 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

கரூரில், தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களை கொண்டும், தனியார் பேருந்துகளை கொண்டும், முழு அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன..

மதுரை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 40 விழுக்காடு அளவிற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கும் மிக குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால், சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து போனது.

இதற்கிடையே, போக்குவரத்து மண்டலங்கள் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, எத்தனை சதவிகித அளவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டன என தமிழக அரசின் போக்குவரத்துதறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மாநகர பேருந்துகள் 33.02 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 84.91 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் சராசரி சதவிகித அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன.