‘கரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் அடையலாம்’ :மத்திய நிபுணர்குழு எச்சரிக்கை…

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என்று மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் கொண்ட குழு, கரோனா தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து வருகிறது. தற்போதைய சூழலில் அனைத்து மாநிலங்களும் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் சிறிது சிறிதாக அதிகமாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் மூன்றாம் அலையில் இருக்கக் கூடும் என்று கணித்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றிடவும் வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனை இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது.