கொரோனா அக்கப்போர்கள்

சென்னையில் இருந்து கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் செல்கிறவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துவதோடு, ஊர் மக்கள் செய்யும் அக்கப்போர்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துவிட்டன.

காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேறுவிதமான விளைவுகளை கிராம மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.

“கொரோனா வீடு. அந்த தெரு பக்கம் போகாதீங்க. சென்னைலேர்ந்து வந்திருக்காங்க” என்பன போன்ற போலியான தகவல்களை வாட்ஸ் ஆப்பில் பரப்புகிறார்கள்.

எனக்குத் தெரிந்த இரு அனுபவங்கள். சில நாட்களுக்கு முன் தேனி பக்கம் சென்ற நண்பர் குடும்பம். அவர்களைப் பார்த்து ஊர்க்காரர்கள் பதற்றமாகிவிட்டார்கள். பலகட்ட சோதனைக்குப் பிறகுதான் சென்றுள்ளார்கள்.

காவல்துறைக்குத் தகவல் அனுப்பிவிட்டார்கள். பயத்தில் யாரும் பேசுவதில்லை. வீட்டை அடையாளம் காட்டி பயத்திலேயே பேசியிருக்கிறார்கள்.

இரண்டு. நாகை மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்ற குடும்பம். கொரோனா சோதனையில் நெகட்டிவ்.

ஆனாலும் ஊர்க்காரர்கள் விடுவதாயில்லை. அந்த வீட்டுக்கு பால் கொடுப்பவர்களிடம், மற்றவர்கள் பால் வாங்குவதில்லை. எட்டி நின்று பொருள்களைக் கொடுப்பவர்களைக்கூட ஒதுக்குகிறார்கள். கொரோனா வீடு என்றே அடையாளம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

ஊடகங்களில் சென்னையைப் பற்றி வரும் கொரோனா தொடர்பான செய்திகள் கிராம மக்களைப் பீதியடைய வைத்துள்ளன.

போலியான வதந்திகளைப் பரப்புவதற்கு வாட்ஸ் ஆப் பயன்படுகிறது. கொரோனா தொற்றைப் பரவாமல் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை மக்கள் மிகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வந்தாலே கொரோனா வந்துவிடும் என்று நம்புகிறார்கள். அரசு நிர்வாகமும் ஊடகங்களும் சேர்ந்துதான் மக்களிடம் உருவாகியுள்ள புரிதல்கள் தவறானவை என்பதை விளக்கவேண்டும்.

வடமாநிலங்களைப்போல அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்ற அளவில் மகிழ்ச்சிகொள்ளலாம்.

கேரளத்தில் விழிப்புணர்வு பீதியாக மாறவில்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதன் மூலம் சமூகத் தொற்றை அரசு வெற்றிகரமாக தடுத்துள்ளது.

இங்கே நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான அரசின் சுகாதார நடவடிக்கைகள் பீதியாக மாறியுள்ளன.

சகமனிதர்கள்மீதான அக்கறையும் கருணையும் கொண்ட செயல்பாடாக அவை மாற்றப்படவேண்டும்.

நன்றி
சுந்தரபுத்தன் முகநுால் பதிவு