செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு? : வைகோ காட்டம்..

பிராந்திய மொழி வானொலியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு மதிமக பொதுச் செயலாளர் வைகோ காட்டம் எதிர்ப்பு தெரிவித்தள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்.

அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் 25,000 பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கின்றது.
மோடி பிரதமரானது முதல் மன் கி பாத் என்ற பெயரில் முழுக்க இந்தியில் உரை ஆற்றுகின்றார். கொரோனாவுக்குப் பின்பு அண்மைக்காலமாக அவர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலியிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றார்கள்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, அனைத்து மாநில சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முழுமையாக இந்தியில். நேரலையில் ஒலிபரப்பினார்கள். தில்லி நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்த விழாவில் பேசப்பட்ட உரைகள் முழுமையாக இந்தியில் நேரலையில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.
தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிப்பதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
30.11.2020