முக்கிய செய்திகள்

தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை : சென்னை போலீஸ்..


தீபா வீட்டுக்கு சோதனை செய்வதற்காக வந்த போலி அதிகாரி பிரபாகரனுக்கும், தீபா கணவர் மாதவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ. தீபாவின் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரி என ஒருவர் வந்துள்ளார். பின்னர், போலீசார் வருவது தெரிந்ததும் அவர் ஓட்டம் பிடித்தார். நேற்று முன்தினம் இரவு அந்த ஆசாமி போலீசில் சரணடைந்தார்.

அவரது பெயர் பிரபாகரன் என்று தெரிவிக்கப்பட்டது. தீபாவின் கணவர் மாதவன் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி, நடிக்கச்சொன்னார் என பிரபாகரன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது. அதற்கு ஏற்றார்போல மாதவன் தலைமறைவானார்.

இந்நிலையில், பிரபாகரனுக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை என சென்னை மாநகர போலீசார் விளக்கமளித்துள்ளனர். போலி அடையாள அட்டை மற்றும் சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான் எனவும் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியது பொய்யான தகவல் என்றும் தெரிவித்தனர்.