இறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்?: புவனன்

யானை காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல என்பார்களே… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கதைதான்… நாட்டையே ஒரு குடைக்கீழ் கொண்டு வரப் போவதாக கர்ஜித்த பாஜக எனும் அரசியல் ஆக்டோபசுக்கு,  டெல்லியில் தன் காலடியில் படுத்துக் கொண்டு படுத்தி எடுத்த அரவிந்த் கெஜ்ரிவாலை ஒன்றும் செய்ய முடியவில்லை.  டெல்லி அரசையே பலவாறாக முடக்கிப் பார்த்தும் முடியவில்லை. இறுதியாக அதிகாரிகளுக்கும் அரசுக்குமான போராக அதை மாற்றி வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு… அதிகாரிகள் ஒத்துழைப்பின்மை… ஆளுநர் வீட்டு முன் உண்ணாவிரதம் என நெருப்பைப் பற்றவைத்துக் கொண்டிருந்த கெஜ்ரிவாலுக்கு கிடுக்கிப் பிடி போட மத்திய அரசுக்கு அபாரமான வாய்ப்பு கிடைத்துள்ளது… பிப்ரவரி 19 ஆம் தேதி  இரவு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அனுஷ் பிரகாஷை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் இரண்டு ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றிய டெல்லி போலீசார் அதனையும் ஆய்வு செய்தனர். தற்போது, தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் இருந்து 40 நிமிடம் தாமதமாக காட்டுவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, முதலமைச்சர் கெஜ்ரிவால் மீதும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் தயாராகி வருகிறது. இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டால், இருவருக்குமே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே ஆம்ஆத்மி ஆட்சியைக் கலைத்துவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலையும் உள்ளே தள்ளிவிட வேண்டும் என்பது மத்திய மன்னரின் கணக்கு என்கிறார்கள் மனதோடு பேசும் தலைவர் வட்டாரத்தைச் சேர்ந்த பிரமுகர்கள். ஏனென்றால் தலைநகரான டெல்லியில் தலைவலியை வைத்துக் கொண்டு நாடு முழுவதும் வெற்றிக்காக வியூகம் வகுப்பது ஓட்டைப் பாத்திரத்தில் நீரை ஊற்றும் முயற்சி என பாஜகவினரும், தலைமையும் கருதுவதாக கூறப்படுகிறது. எனவேதான், டெல்லியை முதலில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு கட்சியின் ஆட்சி இருக்கக் கூடாது. அதனால், ஆம்ஆத்மி அரசை எறும்பைப் போல நசுக்கித் தள்ள நடுவண் அரசு முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. யானையின் காதுக்குள் இருக்கும் வரைதான் கட்டெறும்புக்கு மரியாதை, தவறிப் போய் அதன் காலடியில் சிக்கினால்… நசுங்க வேண்டியதுதான்… அதுதான் விரைவில் நடக்கப் போகிறது என்கிறது டெல்லி அரசியல் வட்டாரம்…

 

Delhi Police prepare to File Charge sheet against Kejriwal in CS Assault case