முக்கிய செய்திகள்

திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தால் தோற்பார்கள்: ரஜினி கருணாநிதி சந்திப்புக்குப் பின் ஸ்டாலின்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மிக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினியை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதியை சந்தித்த ரஜினி அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன், தனது அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்து ஆசி பெற்றார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கருணாநிதியை ரஜினிகாந்த் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. புதிய கட்சியை தொடங்கும்போது கருணாநிதியிடம் விஜயகாந்த்தும் வாழ்த்து பெற்றார்.

பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்படுத்தப்பட்ட மண் தமிழக மண். திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து பலர் தோற்ற வரலாறு அனைவருக்கும் தெரியும்.

வீட்டிற்கு வருவோரை இன்முகத்துடன் வரவேற்பது தமிழர் பண்பாடு என்ற முறையில் ரஜினிகாந்த்தை வரவேற்றோம். தி.மு.க. ஆதரவு ரஜினிக்கு தேவையா என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.