துரைமுருகனுக்கு கரோனா என வதந்தி: பரிசோதனையில் நெகட்டிவ்..

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா எனத் தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். தனது 82-வது வயதிலும் தன் தொகுதி மற்றும் பல்வேறு தொகுதிகளிலும் திமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், கட்சிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஏப்.06 அன்று, காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று (ஏப். 07) அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி என்றும், அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் என்றும் தகவல் வெளியானது.

ஆனால், அவருக்கு கரோனா நெகட்டிவ் என்றே பரிசோதனையில் வந்ததாக, துரைமுருகன் தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. துரைமுருகனுக்கு கரோனா என்ற தகவலில் உண்மையில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.