முக்கிய செய்திகள்

அமெரிக்கா மீது பொருளாதார தடை?: அரபு நாடுகளுக்கு லெபனான் கோரிக்கை..


இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை கிளப்பியுள்ள டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, பாலஸ்தீனம் – இஸ்ரேல் எல்லையில் கலவரத்தை உண்டாக்கியுள்ளது.

ஒட்டு மொத்த அரபு நாடுகளும் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. தனது முடிவை டிரம்ப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு நாடுகள் கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பேசிய லெபனான் வெளியுறவு மந்திரி ஜெப்ரான் பாஸ்சில், “ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு குறித்து முன்நடவடிக்கைகள் நாம் எடுப்பது அவசியமாகிறது. அமெரிக்காவுக்கு எதிராக தூதரக ரீதியிலான எதிர்ப்பை பதிவு செய்வது, அரசியல் ரீதியான விவாதத்தை முன்னெடுத்து செல்வது, இதை அடுத்து நிதி மற்றும் பொருளாதார தடைகளை கொண்டு வருவது ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும்” என பேசினார்.

இதற்கிடையே, எகிப்தில் உள்ள கோப்டிக் கிறிஸ்தவ தலைவர் (போப்), அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உடனான சந்திப்பை ரத்து செய்துள்ளார்.