தனியார் கையில் கல்வி, அரசு கையில் டாஸ்மாக்: மது விற்க ஐஏஎஸ் அதிகாரியா?: கமல் ஆவேசம்..


தனியார் கையில் கல்வியைக் கொடுத்துவிட்டு அரசு டாஸ்மாக் மூலம் மது விற்கிறது. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பு, கேவலமாக இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை வழங்கிய கமல் ஹாசன் பின்னர் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

”தனியார் செய்யக்கூடிய ஒரு வேலையை அரசும் எடுத்துக்கிட்டு ஐஏஎஸ் அலுவலரை வைத்து செய்யக்கூடியது ரொம்ப கேவலமான வேலை. நான் சொல்வது டாஸ்மாக்கை.

அதை யார் எந்த வியாபாரியிடம் கொடுத்தாலும் நடத்திடுவாங்க, அதை ரெகுலேட் செய்து இதை செய்தால் போதும்னு சொல்ற வேலையை விட்டு விட்டு அரசு கல்வியை கொண்டுபோய் தனியார் கையில் கொடுத்துவிட்டு இந்த டாஸ்மாக்கை கவனித்து போஸ்ட் ஆஃபீஸைவிட பெட்ரோல் பங்கைவிட எல்லா இடத்திலும் கிடைக்கக்கூடிய ஒரு அத்தியாவசியத் தேவை போன்று மாற்றிவிட்டார்கள்.

இது அத்தியாவசியப் பொருளல்ல. டாஸ்மாக் இல்லாமலும் இருக்க முடியும். ஆனால் அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள். இதை சரி செய்யும் நேரம் வந்துவிட்டது. நான் மதுவிலக்கு முழுமையாக முடியாது என்று கூறும் காரணம் எல்லோரும் குடித்து பாழாய்ப் போக வேண்டும் என்ற காரணத்தினால் அல்ல.

எல்லோரும் குடிக்க ஆரம்பித்து விட்டீர்கள். பாழாய்ப் போகாமல் இருப்பதற்கு சரிசெய்ய வேண்டுமே தவிர முழுவதுமாக குடிக்கக் கூடாது என்று தடுத்து மொத்தமாக முடக்கினால் அதைவிட கொடிய போதைக்கு அவர்கள் அடிமையாகத்தான் போவார்கள்.

கல்வியின் தரம் உயர்த்தப்படவேண்டும். ஏழை கனவு கூட காணமுடியாத அளவுக்கு விலையை உயர்த்தக்கூடாது. வாய்ப்பைக் கூட்ட வேண்டும். பல பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் சட்டம் கொண்டு வர வேண்டும். அரசு அலுவலர்கள், அமைச்சர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அரசுப் பள்ளியின் தரம் உயரும் என்கிறார்கள். செய்து பார்ப்போம்”.

இவ்வாறு கமல் பேசினார்.