முக்கிய செய்திகள்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

 

என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தோம். பாசமலர்களாக பிறந்து வளர்ந்தோம். ஒரே வீட்டில் இருந்தோம். அதுவொரு கனாக்காலம். நினைவுகளில் மட்டும் இருக்கிறது. பக்கத்து ஊருக்கோ அல்லது கோயிலுக்கோ போவதாக இருந்தாலும்கூட, வீட்டில் நான்கைந்து பேரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். குடும்பமும் அதுசார்ந்த சமூகமும் அப்படித்தான் இருந்தன.

“என்னை மட்டும் வீட்ல விட்டிருந்தா காலேஜ்ல படிச்சிருப்பேன்” என்று கடந்தகாலத்தின் இழப்பை நினைத்து தேம்புகிறவர்களைப் பார்த்திருக்கிறோம். சில கட்டுப்பாடுகள் எதிர்மறையாக இருந்தன. எத்தனையோ பெண்கள் பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துக்கொண்டார்கள். வெளியூர் போய் படிக்கமுடியவில்லை. காலம் அப்படித்தான் இருந்தது. பலபேருக்கு கல்லூரி படிக்கும்போது திருமணம் நடந்துவிடும். திருணமான பிறகும் படிப்பார்கள். சுதந்தரம் இல்லை.

வீட்டில் இருந்து ஒரு பேருந்து ஏறி போவதற்குக்கூட “அவ்வளவுதூரம் போய் படிக்க வேண்டாம்“ என்று சொல்லி படிப்பை நிறுத்திவிடுவார்கள். இன்று அப்படியில்லை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் போய் படிக்கும் அளவுக்கு நிலை உயர்ந்திருக்கிறது. மிகப்பெரிய சுதந்தரமான காலம். ஆண். பெண் இருவருக்கும் தடையில்லை. இதெல்லாம் இன்றைய தலைமுறைக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகள் வசதிகள் சுதந்தரங்கள். அவற்றையெல்லாம் நேர்மறையாகப் பயன்படுத்தினால் எதிர்காலம் நம்பிக்கைமிக்கதாக மாறும்.

கல்விக்கடன் வாங்கமுடியாத காலமும் இருந்தது. அதுவும் பெண் பிள்ளைகளுக்குக் கிடைக்கவே கிடைக்காது. இன்று அப்படியில்லை. படிப்புக்காக கடன் வாங்கும் வசதிகள் வந்துள்ளன. சில வங்கிகளில் கடன் வாங்கும் முறைகள் கடுமையாக இருக்கலாம். அதுவும்கூட மாறியிருக்கிறது. வசதிகள் பெருகிவிட்டன. நாம்தான் அதை உயர்வுக்காகப் பயன்படுத்தவேண்டும். உலகம் குளோபல் வில்லேஜ் ஆக உருமாறியிருக்கிறது.

ஒருகாலத்தில் பெண்களிடம் பேசமுடியாது. பேசினால் காதல் என்பார்கள். பெண்களுடன் ஆண்களுக்கு நட்பே இருக்கமுடியாது என்று நம்பிய மனிதர்கள் வாழ்ந்தார்கள். பரந்த மனமில்லை. இன்றைய நிலையில் இளம் பெண்களும் இளைஞர்களும் உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள். வீட்டுக்கு வருகிறார்கள். நண்பர்களின் அறைகளில் போய் தங்கி மணிக்கணக்கில் அரட்டை அடித்துவிட்டு  வருகிறார்கள். உதவி செய்கிறார்கள். ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. அந்த  கோட்டைத் தாண்டும்போதுதான் பிரச்னை உருவாகிறது. இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு நம்பிக்கையான வாய்ப்புகள்.

பொறுப்பு உணரும் இளைஞர்கள் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் முன்னே வந்துவிடுகிறார்கள். கேளிக்கைகளில் மட்டுமே கவனம் கொண்டவர்கள் வாழ்க்கையில் பின்னே தள்ளப்படுகிறார்கள். அனுபவம்தான் வழிகாட்டும். ஆனால் எத்தனை பேருக்கு ஆரோக்கியமான நட்பும், சுற்றுச்சூழலும் அமைகிறது. நாம்தான் நமக்கான உலகை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தளார் நார்மன் வின்சென்ட் பீல் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். ஒரு காட்டில் அமைதிக்காக அவர் சென்றிருக்கும்போது, அங்கே வரும் இளைஞர்கள் அதிகமாக சத்தத்துடன் இசைக்கிறார்கள். அதுபற்றி அவர் இப்படித்தான் சொல்கிறார்: இந்தக் காட்டின் இசையை அவர்கள் ரசிக்காததால் எவ்வளவு சுகத்தை இழக்கிறார்கள்.

சமகால உலகில் புதுமையான வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. ஐடி செக்டார் வளர்ந்து வேறு திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய வகை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ஒரு பாடத்தில் பகுதியாக இருந்த பாடப்பிரிவுகள் தனித் துறையான வளர்ந்திருக்கின்றன. பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் இந்த மூன்று உலகமும் ஒருவருக்கு சரியாக அமையும்போது அல்லது அமைத்துக்கொள்ளும்போது வாழ்க்கை சீரான பாதையில் செல்லத் தொடங்குகிறது.

பணம் சம்பாதிக்கலாம். நற்பண்புகளை இழந்துவிடக்கூடாது. துன்பங்கள் நேரலாம். பாதை தவறிவிடக்கூடாது. திறமைக்கு மரியாதையும் வெகுமதிகளும் உண்டு என்ற நம்பிக்கை முக்கியம்.

 

தொடரும்