ராணுவ ரகசியம் என்றாலும் விசாரிக்கலாம்: மத்திய அரசு தலையில் உச்சநீதிமன்றம் நச்…!

ஊழல்புகார் என்று வந்துவிட்டால் ராணுவ ரகசியத்தையும் விசாரிக்கலாம் என ரபேல் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையுடன் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சூடான விவாதம் நடைபெற்றது.

அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், ரபேல் பேரம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டவை என்பதால், அவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ளக் கூடாது என வாதிட்டார். மேலும், அந்த ஆவணங்கள் மத்திய அரசின் உரிமைக்கு உட்பட்டவை எனவும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.  எனவே, ரேபல் தொடர்பாக வெளியே கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பான தகவல்களை, மறு ஆய்வு மனுவில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபாலுக்கும், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் நீதிபதிகளுக்கு இடையே நடைபெற்ற வாதத்தைக் காணலாம்:

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்: கசிந்த ஆவணங்கள் அரசுக்கு உரிமை உள்ளவை என்பதால் அது குறித்து விசாரிக்கக் கூடாது என்பதை குறிப்பிட்டு முதலில் அரசு தரப்பில் ஒரு மனுவைத் தாக்கல் செய்யுங்கள். அதில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் பின்னர் பார்க்கலாம்.

மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே ரகசியம் காக்க வேண்டிய தகவல்கள் அரசுக்கு உரிமை உள்ளவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதே….

நீதிபதி கே.ஜோசப்: ரகசியம் காக்கும் விவகாரத்தில், முக்கியமான துறை சார்ந்த பிரச்சினையாக இருப்பினும், சில விதிவிலக்குகள் உண்டு. ஊழல் புகாருக்காக எந்த ரகசியத்தையும் விசாரிக்கலாம்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்: ரபேல் பேரம் தொடர்பாக அரசு தாக்கல் செய்துள்ள சிஏஜி அறிக்கையிலேயே அனைத்து தகவல்களும் உள்ளனவே… எனவே, பாதுகாப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்: , தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்கிறீர்கள். அப்படியென்றால் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களை பெற்றதாக எங்களால் கருத முடியும்… எனினும் ரபேல் பேரத் தகவல்கள் மத்திய அரசுக்கு உரிமை உள்ளவை எனக் கோரியிருப்பதால், அது தொடர்பாக நீதிமன்றம் தீர்மானித்த பின்னர், எதிர்த்தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தமது பதில்களை தாக்கல் செய்யலாம்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.