சொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி

 

ஃபேஸ்புக் என்பது இப்போதெல்லாம் மனிதர்களோடு ஒட்டிக் கொண்ட அத்தியாவசிய டிஜிட்டல் உபகரணங்களில் ஒன்றாகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களை ஏளனமாக பார்ப்பதுண்டு. சில ஆண்டுகளாக ஃபேஸ்புக் பக்கம் வைத்துக் கொள்ளாதவர்களையும் அப்படித்தான் பார்த்து வருகிறார்கள்.

ஆனாலும்,  பல நாடுகளில் இணைய வசதி இல்லாத பகுதிகளும், அதைப்பெற இயலாத மனிதர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள். ஆப்பிரிக்கக் கண்ட நாடுகள் அதில் அதிகம் என்றாலும், இந்தியாவிலும் கூட அதுபோன்ற நிலை இருக்கவே செய்கிறது. இப்படி இணையவசதி இல்லாத பகுதிகளையும் தன் வலைக்குள் இழுத்துப் போடுவது குறித்து ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் பல ஆண்டுகளாகவே சிந்தித்து வருகிறார்.

அதன் விளைவுதான் அடுத்த ஆண்டு ஆதெனா (Athena) என்ற பெயரில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சொந்தமாக ஒரு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், உலகின் இணைய வசதி இல்லாத எந்த ஒரு மூலை முடுக்கோ, வனாந்திரமோ, மலைப்பிரதேசமோ, கடல் பரப்போ எதுவாக இருந்தாலும் அங்கிருந்த படியே நீங்கள் ஃபேஸ்புக்குடன் கட்டி உருளலாம்.

பூமியில் இருந்து 150 கிலோ மீட்டர் முதல், 1800 கிலோ மீட்டர் வரையிலான குறைந்த தூரத்தில் விண் வெளியில் பறப்பதற்கான செயற்கைக்கோளை இதற்காக தயாரித்து வருகிறது ஃபேஸ்புக். ஸ்பேஸ் எக்ஸ், ஒன் வெப் என்ற மேலும் இரண்டு நிறுவனங்களும் சொந்தமாக இணைய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை அமெரிக்காவின் மத்திய தகவல் ஆணையத்தின் மூலம் ஃபேஸ்புக் உறுதிப்படுத்தி இருப்பதாக “வயர்டு” இணையதளம் தெரிவித்துள்ளது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது .கடந்த 2016ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் ஆஸோம்-6 என்ற இணைய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த முயன்று பலத்த அடிவாங்கியது. அதையும் மார்க் மறந்திருக்க மாட்டார்தானே!     

FACEBOOK TO LAUNCH NEW INTERNET SATELLITE