விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், ஓய்வூதியம், ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாக் கடன், ராமர் கோயில், 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாஜக தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது.

அப்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் வாக்குறுதியில் 75 அம்சங்கள் உள்ளதாகவும் அவை அனைத்தும் 2022-க்குள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.

* 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்

* தூய்மை இந்தியா திட்டத்தில் 100% தூய்மை எட்டப்படும்

* கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்

* ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமையாக்கப்படும்

* முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்

* ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும்

* நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும், அதற்குத் தனி ஆணையம் அமைக்கப்படும்

* நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33% இட ஒதுக்கீட்டுக்கு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.

* 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

* நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

* தீவிரவாத விஷயத்தில் சகிப்பின்மைக் கொள்கை கடைபிடிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*சிறு விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6,000 அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்