திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்: துணைவியாருடன் நேரில் சென்று ஸ்டாலின் அஞ்சலி

 

திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது துணைவியாருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

2008ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி. அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.

தனது 57ஆவது பிறந்தநாளை மே 8ஆம் தேதி கொண்டாட இருந்த நிலையில் வசந்தி ஸ்டான்லி காலமானார். அவரது உடல், ராயப்பேட்டை லாய்ட்ஸ் காலனியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். வசந்தி ஸ்டான்லியின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வசந்தி ஸ்டான்லியை திமுகவின் வீராங்கனை என புகழாரம் சூட்டினார். அவரது இழப்பு திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் ஸ்டாலின் கூறினார்.