முக்கிய செய்திகள்

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் சந்தாதாரர்களுக்கு ஓர் அறிவிப்பு


அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பெற்ற சந்தாதாரர்கள், வேறு ஊருக்குச் செல்லும் போது புதிய செட்டாப் பாக்ஸ் பெறுவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்கள் வேறு ஊருக்கு பணி காரணமாகவோ, இடவசதி காரணமாகவோ குடிபெயர்ந்து செல்கையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்களையும் எடுத்துச் சென்று விடுவதாக இந்நிறுவனத்திற்கு புகார் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பகுதியில் வழங்கப்படும் இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை வேறு பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டரால் செயலாக்கம் செய்ய இயலாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை பெற்று வரும் சந்தாதாரர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலோ அல்லது அதே ஊரில் வேறு ஒரு பகுதிக்குச் சென்றாலோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்களை அந்த பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பி செலுத்தி விட்டு செல்ல வேண்டும். அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் செட்டாப் பாக்ஸ்கள் எடுத்து செல்பவருக்கோ (அல்லது) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கோ

பயனற்றதாகிவிடும். எனவே, புதிய பகுதிக்கு சென்றபின் அந்த பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் CAF (Customer Application Form) படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து புதிய செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸை எடுத்துச் சென்று வேறொரு பகுதியில் அங்கு உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் வாயிலாக செயலாக்கம் செய்ய இயலாது.

எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து செல்கையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸை சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் ஒப்படைத்து விட்டு புதிய இடத்தில் வேறு செட்டாப் பாக்ஸை அப்பகுதி கேபிள் ஆபரேட்டரிடம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது’.