ஆட்சியை காப்பாற்ற அமைதியாக இருக்கிறார்கள் : எடப்பாடி அரசு மீது குஷ்பு குற்றச்சாட்டு…


பெப்சி அலுவலகத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து ஒரு ஆண்டு முடிவடைந்தது பற்றி?

பதில்:- வரி கட்டினால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் ஜி.எஸ்.டி. வி‌ஷயத்தில் அருண் ஜெட்லி, அமித்ஷாவுக்கு தெளிவு இல்லை. தவறுதலாக பல வி‌ஷயங்களை செயல்படுத்தி விட்டார்கள். மன்மோகன் சிங் ஜி.எஸ்.டி.யால் ஜி.டி.பி. குறையும் என்று முன்பே கூறினார். அப்போது அவரை பா.ஜ.க.வினர் திட்டினார்கள். இப்போது அதுதானே நடக்கிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. ஜிஎஸ்டியால் ஏகப்பட்ட பொருளாதார பிரச்சினைகள்.

கே:- பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது பற்றி?

ப:- தாமசன்ராய்ட்டர் என்ற நிறுவனம் கூறியிருக்கிறது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 2015- 2016 காலகட்டத்தில் இது தொடர்பாக 39 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

2013 -ல் இதே நிறுவனம் இதே வி‌ஷயத்தில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக சொன்னபோது மோடி ஒரு பெண் தலைவியாக இருக்கும் நாட்டில் இப்படியா? என்று சோனியா காந்தியை பார்த்து கேள்வி கேட்டார். இப்போது நாங்கள் கேள்வி கேட்கிறோம். அவர்கள் மழுப்பலாக பதில் சொல்கிறார்கள்.

கே:- சேலம் சென்னை 8 வழி சாலை பற்றி?

ப:- நாட்டுக்கு வளர்ச்சி தேவை. ஆனால் விவசாயம் பாதிக்க கூடாது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான பதில் இல்லை. ஸ்டெர்லைட் வி‌ஷயத்திலும் மாநில அரசிடம் சரியான பதில் இல்லை.

கே:- சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடித்ததற்காக பா.ம.க. எதிர்ப்பு தெரிவிக்கிறதே?

ப:- எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கொண்டே இருந்தால் நம் வேலையை நாம் செய்ய முடியாது.

கே:- தமிழகத்தில் கவர்னர் ஆய்வு தொடர்கிறதே?

ப:- ராமர்-லட்சுமணர் போல இருக்கும் முதல்வரும் துணை முதல்வரும் எங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்கட்டுமே… தம்பி நீங்க இப்ப பேசக்கூடாது என்று டெல்லியில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். தங்கள் ஆட்சியை 3 ஆண்டுகள் காப்பாற்றுவதற்காக இருவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

கே:- தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்று கூறினீர்களே?

ப:- அதுபற்றி பேச வேண்டாம். அது முடிந்து போன வி‌ஷயம். மீண்டும் மீண்டும் அரைத்தால் புளித்துவிடும். மாற்றுவார்களா என பார்ப்போம்.

கே:- தமிழக மகிளா காங்கிரசில் இருந்து நடிகை நக்மா நீக்கப்பட்டு இருக்கிறாரே?

ப:- எனக்கும் மகிளா காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. அது மேலிடம் எடுத்த முடிவு.

கே:- கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு காவிரி வி‌ஷயத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்போகிறதே?

ப:- இது குறித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் தான் பதில் கூற வேண்டும்.

கே:- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப:- இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்று தெரியாது. எனக்கு சீட் கிடைக்கா விட்டால் எனக்கும் தலைமைக்கும் பிரச்சினை என்பார்கள். கிடைத்து விட்டால் அந்த தைரியத்தில் பேசுகிறார் என்பார்கள். நான் வீடு செல்வதற்குள் என்னவெல்லாமோ நடந்து விடும். அதெல்லாம் வரும் போது பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.