இந்தியர்கள் அவசியமில்லாமல் சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்..

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவசியமில்லாமல் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகங்களின் செயலர்கள், வெளியுறவுத் துறை, உள்துறை, ராணுவம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலைமையைக் கண்காணித்தல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார் நிலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், விமான நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்படுவது, வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்துவது தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பயணங்களுக்கான அறிவுரையின் நீட்சியாக, அவசியமற்ற சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதுவரை 21,805 பயணிகள் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கூடுதலாக, 3,97, 152 விமானப் பயணிகள் மற்றும் 9,695 கடல் மார்க்கப் பயணிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை முதல் காத்மண்டு, இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்படுவது குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2362 ஆக உயர்ந்துள்ளது.