முக்கிய செய்திகள்

ரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு?: கி. கோபிநாத், பத்திரிகையாளர்

 

       கி. கோபி, கட்டுரையாளர்

உடனடியாக தவிர்க்க வேண்டிய வெள்ளை சர்க்கரையும், பளபள உப்பும், அத்தியாவசிய பட்டியலுக்கு சென்று படுத்தும்பாடு பகீர் ரகம். இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே சர்க்கரையையும், உப்பையும் சப்புக்கொட்டி சாப்பிடுகிறோம்.

வெள்ளை சர்க்கரை

இதுக்கு பேரு வெள்ளைத் தங்கம், ஆனால் இதுசெய்யும் வேலையோ படு பங்கம். டாய்லட் கழுவப் பயன்படும் குளோரின், டி.ஏ.பி. உரம் தயாரிக்க பயன்படும் பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, சல்பர் டை ஆக்சைடு, பாலி எலக்ட்ரோலைட், காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா, சோடியம் ஹைட்ரோ சல்பேட், கால்சியம் ஹைட்ராக்சைடு இவற்றின் கலவைதான் வெள்ளை சர்க்கரை. நாங்கள் வெஜ் என காலரைத் தூக்கிவிடுபவரா நீங்கள், வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் நீங்களும் அசைவ உணவு சாப்பிடுபவர்தான். ஏனென்றால், சர்க்கரையை வெளிர் நிறமாக்க மாட்டு எலும்பு பயன்படுத்தப்படுகிறது.

கரும்பிலிருந்து சாறு பிழிந்து பல படிநிலைகளில் அதன்மீது 100 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் வெப்பத்தை உமிழ்ந்து ரசாயனங்களை கலக்கும்போது, நல்ல வைட்டமின்கள் காணாமல் போய்விடும். அதிலுள்ள கனிமங்கள், நுண் ஊட்டப்பொருள்களும் நீக்கப்பட்டுவிடும். குளுக்கோஸ், ப்ரூக்டோஸ், கரி மற்றும் அதில் சேர்த்த ரசாயனங்கள்தான் எஞ்சி இருக்கும்.

இவற்றிலிருந்து பிரிக்கப்படும் பளபள சர்க்கரை நமது உடலுக்குள் சென்றவுடன், குளுக்கோஸ், ப்ரூக்டோசாகப் பிரியும். நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கும் குளுக்கோஸ் சாதாரணமாக ஜீரணமாகிவிடும். ஆனால் ப்ரூக்டோஸை, ஈரலால் அதாவது லிவரால் மட்டுமே ஜீரணிக்க முடியும். இதனால் ஈரல் பாதிக்கப்பட்டு இன்சுலின் தேவையான அளவு சுரக்காததால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, அதிக அளவு உணவை உட்கொள்ள வைக்கும் தன்மை ப்ரூக்டோஸுக்கு உள்ளதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது தொற்றா நோய்களுக்கான கதவை திறந்துவிடுகிறது.

நீரிழிவை பணக்கார நோய் என்று முன்பு குறிப்பிடுவார்கள். ஏனென்றால் செல்வந்தர்கள் உடலுழைப்பின்றி உட்கார்ந்து சாப்பிடுவதால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தது. இப்போது பேறு கால பெண்கள், டீன் ஏஜ் பருவத்தினர் முதற்கொண்டு, கடுமையான உடலுழைப்பு செய்பவர்களையும் நீரிழிவு நோய் விட்டுவைக்கவில்லையே ஏன்? உணவே மருந்து என்பது மாறி, ரசாயனமே உணவு என்று மாறியதுதான் இதற்குக் காரணம்.

தொற்றா நோய்களை கூவிக்கூவி கூப்பிடுவதில் முதலிடம் வெள்ளை சர்க்கரைக்குத்தான். அதில் கலக்கப்படும் ரசாயனங்கள் வயிற்றிலுள்ள கட் பயோமி எனும் நுண்ணுயிரியை பாதிப்பதால், உடலின் இயல்பு சமநிலை மாறுபடுகிறது. புற்றுநோய், உடல் பருமன், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பது, ஈரல் நோய், கிட்னி கோளாறு, சிறுநீரகக் கோளாறு, பதற்றம், மலச்சிக்கல், குழந்தையின்மை, எலும்பு பாதிப்பு, அல்சைமர், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, தாது குறைபாடு, கண், பல் கோளாறு இப்படி எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு கெடுதலையும் செய்கிறது சர்க்கரை. சர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். 

நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு இனிப்பு சத்து தேவை. அரிசி, கிழங்கு, கீரை வகைகளில் உள்ள குளுக்கோஸ், ப்ரூக்டோஸ் என்ற வடிவில் செல்கள் இனிப்பை எடுத்துக்கொள்ளும். இது மெதுவாக ரத்தத்தில் கலக்கும் தன்மை கொண்டது. அறிவியல்படி கிளைசிமிக் இன்டெக்ஸ் மூலம் இதை குறியிடுவார்கள். (சர்க்கரை உடலில் கலக்கும் வேகத்தின் குறியீடு).

ஆனால் லெட்டின் ஹார்மோன்தான் வெள்ளைச் சர்க்கரைக்கு நம்மை அடிமையாக்குகிறது. இது பாதிக்கப்படும்போது சர்க்கரை அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடும்போது, அது உடனடியாக ரத்தத்தில் கலந்து செயல்படத்தொடங்கும். அப்போது செல்கள் துரிதமாகச் செயல்படத் தொடங்குவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஆனால், ரசாயனங்களால் செல்களை துரிதமாக இயங்கச் செய்வது நன்மையா? என சிந்திக்க வேண்டும்.

சராசரியாக, நாளொன்றுக்கு பெண்கள் என்றால் 6 டேபிள் ஸ்பூன், ஆண்கள் என்றால் 9 டேபிள் ஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்க ஹார்ட் அசோஷியேன் பரிந்துரைக்கிறது. தயாரான ஆறு மாதத்துக்குள் சர்க்கரையை உபயோகப்படுத்தாவிட்டால், அதில் கலக்கும் சல்பர் டை ஆக்சைடு காரணமாக அது நஞ்சாக மாறிவிடும் என எச்சரிக்கப்படுகிறது.

வெள்ளைச் சர்க்கரை என்ற ரசானயனக் கலவைகளால்தான் நாம் இனிப்பு சத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ன? நம்மிடம் வளருவதற்கு தண்ணீர் கூட கேட்காத பனையில் இருந்து கிடைக்கும் வெல்லம் போதுமே.

பளபளக்கும் உப்பு

மூங்கில் உப்பு, கடல் உப்பு, பாறை உப்பு அல்லது இந்து உப்பு, டேபிள் சால்ட், கோஷர் உப்பு, இன்ஃபியூஸ்டு உப்பு, இப்படி பல வகைகள் உள்ளன. இதில் சர்க்கரைக்கு சற்றும் சளைத்ததல்ல டேபிள் சால்ட். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால், தற்போதோ, அயோடைஸ்டு உப்பு அதாவது டேபிள் சால்ட் போட்ட உணவுப் பண்டங்களை குப்பையில்தான் கொட்ட வேண்டும். இதுவும் ஒரு ரசாயனக் குவியல்தான். ஐயோடைஸ்டு சால்ட், கிறிஸ்டல் சால்ட், ஐயோனைஸ்டு சால்ட், ஃப்ரீ ஃபோளோ சால்ட் இப்படி பல பெயரில் டேபிள் சால்ட் விற்கப்படுகிறது.

கடல் நீரிலிருந்து உப்பு பிரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. 1200 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதன் மீது செலுத்தப்படுகிறது. இதனால் கல் உப்பில் இயற்கையாக இருக்கும் சோடியம் மற்றும் தாது உப்புகள், சத்துகள் வெளியேற்றப்படுகின்றன. மூலக்கூறுகளை சிதைத்து சலிக்கப்பட்ட மணலைப் போல பளபளவென உப்பை தயாரிக்கிறார்கள்.

உப்பு தயாரிப்பு படிநிலைகளில் சேர்க்கப்படும் ரசாயனங்களை கேட்டால் மனம் பதைபதைக்கிறது. இதையா உணவில் கலக்கிறோம் என்ற அச்சம் ஏற்படுகிறது. சோடியம் குளோரைடு, ஐயோடைடு, சோடியம் பைகார்போனேட், ஃப்ளூரைடு, பொட்டாசியம் ஐயோடைடு, கால்சியம் கார்போனேட், சோடியம் சிலிகோ அலுமினேட், டெக்ஸ்ட்ரோஸ், டால்க் போன்ற வேதிப்பொருட்கள் முலம்தான் பளபள ஐயோடைஸ்டு சால்ட் கிடைக்கிறது. இதில் டெக்ஸ்ட்ரோஸ் என்பது அயோடின் சமநிலைக்கானது.

உப்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் சலித்த மணல் போல இருப்பதற்கு சேர்க்கப்படுவதுதான் சோடியம் சிலிகோ அலுமினேட். டால்க் அதாவது கார்சினோஜென் என்ற வேதிப்பொருள் குழந்தைகளுக்கான முகப்பவுடர் தயாரிக்க பயன்படுவது.

ஐயோடைஸ்டு டேபிள் சால்ட்டில் 97 முதல் 99% சோடியம் குளோரைடு இருக்கும். மனிதனின் ரத்தத்தில் 200 கிராம் சோடியம் உப்புதான் இருக்க வேண்டும். இதற்கு மேல் சேரும் உப்பானது, வியர்வை, சிறுநீர், மலம் மூலமாக வெளியேறும். ஒரு லிட்டர் சிறுநீரில் 2 கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் செய்யும் தைராக்ஸின்  ஹார்மோன் செயல்பட உதவுவது  அயோடின்.  இது குறைவாக இருந்தால், தைராய்டு பிரச்னை ஏற்படுகிறது. அதேநேரம் அதிகம் அயோடின் தாது கலந்த உப்பை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் அழையா விருந்தாளிகளாக வருகின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு 2 கிராம் உப்பே போதும் என்பது மருத்துவர்கள் அறிவுரை.

இயற்கையாக கடலில் இருந்து கிடைக்கும் உப்பில் பொட்டாசியம், மாங்கனீசு, அயோடின், இரும்புச்சத்து, துத்தநாகம் உள்ளிட்டவை இருக்கும். இதுதான் சிறந்தது. ஆனால், கடல் உப்பில் இயற்கையாக உள்ள சோடியத்தை நீக்கிவிட்டு அதில் ரசாயனம் மூலம் சோடியத்தை சேர்ப்பதால் தொற்றா நோய்கள் வராமல் வேறு என்ன வரும். பச்சைக்காய்கறிகளிலும் அயோடின் சத்து உள்ளதை நாம் மறக்கக் கூடாது. இதிலிருந்தே உடலில் உள்ள செல்கள் அயோடினை எடுத்துக்கொள்ளும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். 2016-ல் 13.18 லட்சம், 2017-ல் 30 லட்சம். இது என்ன புதுகுண்டு என்கிறீர்களா? நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என அபாய மணி அடிக்கிறது மத்திய அரசின் ஆய்வு.  அதேநேரம், இந்தியாவில் மருந்து வணிகம் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது பண மதிப்பில் வர்த்தகம் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கும் சர்க்கரை, உப்பு என்ற பெயரில் விற்பனையாகும் நச்சுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.

உணவு அரசியலோடு மோதி ஜெயிப்பதெல்லாம் நடக்காத கதை. வெள்ளை சர்க்கரை, பளபள உப்பு என்றில்லை, ரசாயனம் கலந்த எந்த உணவானாலும் அது தீங்கு எனத் தெரிந்து உட்கொள்வதைவிட, நாமாகவே அதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது. வரும் தலைமுறையாவது, பாரம்பரிய உணவுகளை, முன்னோர் பரிந்துரைத்த முறையில் உண்டு, உணவே மருந்து என்பதை மீண்டும் நிரூபிக்கட்டும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

 திருவள்ளுவர் கூற்றின்படி நோய்க்கான மூலம் ஏறக்குறைய தெரிந்துவிட்டது. ஆங்கில வைத்தியம் வேண்டாம். நீரிழிவு, ரத்தக்கொதிப்புக்கு மாத்திரைகள் சாப்பிட்டு, அது ஏற்படுத்தும் பக்க விளைவுகளுக்கும் மாத்திரை சாப்பிட வேண்டி வரும்.  

Is The Stomach dust bin of chemicals?: Gopi