ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்..

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் இன்று நீதிபதி ஜோசப் உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து ஒன்றிய அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன

இதையடுத்து, ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சிறப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி, மீண்டும் தமிழகம் முழுவதிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசின் சிறப்பு சட்டத்துக்கு எதிராக பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் 15க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின்மீது இன்று உச்சநீதிமன்றத்தில் கே.என்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், இன்று உச்சநீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்துள்ளார். அதில், ஜல்லிக்கட்டு நடத்துவதில் எவ்வித சட்டமீறல்களும் இல்லை. இதற்காக தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜல்லிக்கட்டில் இடம்பெறும் காளைகள் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படுவது கிடையாது. இவ்விளையாட்டு 15 மீட்டர் சுற்றளவில்தான் நடைபெறும். இது பாரம்பரிய தமிழக விளையாட்டாகும்.

கிராமங்கள் முதல் உட்கிராமங்கள் வரை இந்த ஜல்லிக்கட்டை கலாசார விளையாட்டாக நடத்தி வருகிறோம். மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு சட்டமானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. சுமார் 5 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரிய விளையாட்டாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் புலிக்குளம், காங்கேயம் போன்ற தனித்தன்மை வாய்ந்த காளைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகுதான், ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதனால், இதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்பதால், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்மனுவில் வழக்கறிஞர் குமணன் குறிப்பிட்டுள்ளார்.