ஜேஎன் 1 கரோனா : காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்…

உருமாறிய ஜேஎன் 1 கரோனாவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆட்கொல்லி நோயான கரோனா மீண்டும் மெதுவாக பரவி வருகிறது.
சீனா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பரவி வரும் உருமாறிய புதிய வகை ஜேஎன் 1 கரோனாவும் பரவியுள்ளது. இதுவரை இந்தியாவில் 21 பேருக்கு இந்த புதிய வகை கரோனா பரவியுள்ளது. தற்போது கேரளாவில் தான் கரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 358 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 300 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், புதிதாக பரவி வரும் கரோனா தொடர்பாக அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதனால் ஏற்படும் நிமோனியா அதிக மரணத்தை ஏற்படுத்தும் என்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். முகக்கவசம் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் பேசக்கூடாது என்றும் காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.