முக்கிய செய்திகள்

திமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…! : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இன்றைக்கு அண்ணாவின் 110வது பிறந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற விதை அண்ணாவால் விதைக்கப்பட்டது. இன்றைக்கு அங்கு அந்த பழைய வீடு இடிக்கப்பட்டு 5 மாடிக் கட்டிடமாகிவிட்டது.

 

1916இல் நீதிக்கட்சி (Justice Party), பின் 1944இல் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம், பெரியாரின் நடவடிக்கைகளால் முரண்பட்டு அண்ணா அவர்கள் 17/09/1949 அன்று காலை 9.30  மணியளவில் இந்த படத்திலுள்ள எண். 7, பவளக்காரத் தெருவிலுள்ள கே.கே.நீலமேகம் அவர்களது தலைமையில் வெறும் ஒரு குயர் நோட்டுப் புத்தகத்தில் ஒரு தாளை கிழித்து தந்தை பெரியாரின் செயல்கள் ஏமாற்றம் அளிக்கின்றது. நாங்கள் திமுக என்று எங்களுடைய வேலைத்திட்டங்களோடு தமிழ்நாட்டுக்காக பணியாற்றவிருக்கிறோம் என்ற தீர்மானத்தை அண்ணா அவர்கள் முன்மொழிகிறார்கள்.

 

அந்த வீட்டின் சிறு அறையில்தான் இரண்டு நாற்காலிகளும், சில பெஞ்ச்களிலும் அமர்ந்து பேசிய திமுக தான் இன்றைக்கு ஆல விருட்சமாக இருக்கிறது. அன்றைய திமுகவின் முக்கியத் தலைவர்களெல்லாம் வந்து சென்ற இந்த கட்டிடம்.

 

மறுநாள்,18/09/1949 மாலை ராபின்சன் பார்க்கில் கொட்டும் மழையில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தமிழகத்தில் துவங்கப்பட்டது.

 

திமுக துவக்கத்தை தந்தை பெரியார் “கண்ணீர் துளிகள்” என்றார்.

“ஆம்! நாங்கள் கண்ணீர் துளிகள் தான்” என்றார் அண்ணா”

 

பவளக்காரத் தெருவும், தேவராஜ முதலித் தெருவும், இரா. செழியன் பிராட்வேயில் தங்கியிருந்த மாடி அறையில் (TNSC – இன்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியாக, பல மாடிக் கட்டிடமாக மாறியுள்ளது) அண்ணாவும், அன்றைய திமுக தலைவர்களும் வந்து சென்ற இடம் தான் பாரிமுனையில் உள்ள இந்த ஜார்ஜ் டவுன் பகுதி. திமுக வரலாற்றில் மண்ணடி, பிராட்வே போன்ற பகுதிகளெல்லாம் ஆரம்பக்கட்ட பணிகளும் , விவாதங்களும் நடந்த இடங்களாகும். அந்த தலைவர்களும் இன்றைக்கு இல்லை. அண்ணா பிறந்த நாளில் நாம் இந்த இடத்தை இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.

 

K.S.radhakrishnan Recalls Anna’s Memories

நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவில் இருந்து…