முக்கிய செய்திகள்

கலகலப்பு 2 : திரை விமர்சனம்..

கலகலப்பு 2 : திரை விமர்சனம்..


தமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து ஜாலியாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு படம் தான் இப்படி அமையும். இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதை தொடர்ந்து செய்து வருபவர் சுந்தர்.சி, கலகலப்பில் நம்மை ரசிக்க வைத்த சுந்தர்.சி கலகலப்பு-2விலும் சிரிக்க வைத்தாரா? பார்ப்போம்.

கதைக்கரு

சுந்தர்.சி படம் என்றாலே சமீப காலமாக ஒரே களம் தான். ஏதாவது ஒரு விஷயம் தொலைந்து போகும், அது பல பேர் கையில் சென்று கடைசியில் பெரிய சண்டைகள் முடிந்து சுபம் போடுவார்கள்.

அதேபோல் தான் காசியில் மேன்ஷன் வைத்து பிழைத்து வருகின்றார் ஜீவா. ஆனால், அந்த மேன்ஷன் ஜெய்யிற்கு சொந்தமானது, அந்த மேன்ஷனை விற்று தன் குடும்ப வறுமையை போக்க, ஜெய் காசி வருகின்றார்.

அங்கு ஜெய் எதற்கு இந்த மேன்ஷனை விற்க வேண்டும், நாம் சேர்ந்த நடத்தலாம், என முடிவிற்கு வர, இருவருக்குமே பணம் தேவைப்படுகின்றது. சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரின் பணத்தையுமே சிவா திருடுகின்றார்.

இருவருக்குமே ஒரே எதிரி என்பதால் சிவாவை ஜீவா, ஜெய் தேடிச்செல்ல, அதன் பின் நடக்கும் கலகலப்பான சம்பவங்களே இந்த கலகலப்பு-2வின் மீதிக்கதை.

படம் பற்றி ஒரு பார்வை

ஜீவா, ஜெய், கேத்ரின், நிக்கி கல்ராணி, விடிவி கணேஷ், யோகிபாபு என பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் உள்ளது. எல்லோருமே வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும், சுந்தர்.சிக்கு மட்டும் காமெடி பஞ்சமே வராது போல.

வடிவேலு இல்லையென்றால் விவேக், விவேக் இல்லையென்றால் சந்தானம் இவர்கள் யாருமே இல்லையென்றாலும் நான் கலக்குவேன் என்று கலக்கியுள்ளார் சுந்தர்.சி. அதிலும் அம்மாவாசை வந்தால் அருகில் இருப்பவரை அடிக்கும் போலிஸ்.

போலி சாமியாராக வந்து வில்லன் கும்பலிடம் மாட்டி தப்பிக்க முயற்சிக்கும் யோகிபாபு, மண்டையில் அடிப்பட்டு 10 நொடி மட்டும் பழைய நினைவு வரும் முனிஷ்காந்த், எங்கு சென்றாலும் அடிவாங்கி கொண்டு திரும்பும் விடிவி கணேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான காமெடி காட்சிகள் செம்ம ரகளை.

இவர்கள் எல்லோரையும் விட எப்போது வருவார் என எல்லோரும் காத்திருக்க, சிவா எண்ட்ரீ கொடுத்து தன் பங்கிற்கு ‘அட இந்த நாய் திருடுமா, இது என் கூட தான் இருக்கனும்’ என் ஒன் லைன் பன்சில் தூள் கிளப்புகின்றார்.

ஆனால், விருந்தோ, மருந்தோ எல்லாமே ஒரு அளவு இருக்கின்றது அல்லவா. அதுபோல் சிரித்து சிரித்து சில நேரத்தில் நாமே அட போதும் என்று சொல்லும் அளவிற்கு கொஞ்சம் படம் நீளம். அதிலும் முதல் பாதி ஜெய், ஜீவா, கேத்ரின், நிக்கி கல்ராணி காட்சிகள் பெரிதும் கவரவில்லை.

ஹிப்ஹாப் ஆதி என்றாலே பாடல் பட்டாசாக இருக்கும், இதில் ஏமாற்றம் தான், ஒளிப்பதிவு செம்ம கலர்புல்லாக இருக்கின்றது.

ப்ளஸ்

படத்தின் கதாபாத்திரங்கள், எல்லோருமே போட்டி போட்டுக்கொண்டு சிரிக்க வைக்கின்றனர்.

இரண்டாம் பாதியில் வரும் ரோபோ ஷங்கர் சேஸிங் காட்சி, யோகி பாபு வில்லனை 5 அடி அடிக்கும் காட்சி என இரண்டாம் பாதி முழுவதுமே சிரிப்பு சரவெடி தான்.

மைனஸ்

படத்தின் பாடல்கள், அதிலும் முதல் பாதியில் அடுத்தடுத்து வருவது பொறுமையை சோதிக்கின்றது.

பேமிலி ஆடியன்ஸ் வரும் சுந்தர்.சி படத்தில் கிளாமர், டபூள் மீனிங் வசனங்கள் தேவையா?

மொத்தத்தில் கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை இந்த கலகலப்பு-2விலும்.