முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் : குறைந்த கூட்டம் – சுலபமாக கிடைத்த தரிசனம்…

காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை தரிசன விழாவை காண வரும் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக குறைந்ததால் அங்கு வந்திருந்த பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்து சென்றனர்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் சிலை தரிசன விழாவுக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். 19 நாட்களில் 27 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர்.

இடையில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 5 பேர் உயிரிழந்த துயரமும் அரங்கேறியது. இந்த நிலையில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினங்கள் என்பதால் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் உள்ளிட்டோருக்கு என கூடுதலாக ஒரு வழியும் ஏற்படுத்தப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்களும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மாலை நிலவரப்படி 70 ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்களே தரிசனம் செய்திருந்தனர்.

இதனால் தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சுலபமாக மகிழ்சியுடன் தரிசனம் செய்து சென்றனர்.

இதனிடையே அத்தி வரதர் சிலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அவற்றை மேலும் அதிகப்படுத்துவது பற்றியும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.