காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நபரை விஷ வாயு தாக்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகன்கள் இருவர் உட்பட 6 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெமிலி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கழிவுநீர் தொட்டியை கழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளிகள் சுத்தம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்றபின் சரியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க, கிருஷ்ணமூர்த்தி தொட்டிக்குள் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது விஷவாயு தாக்கவே அவர் கூச்சல் போட்டுள்ளார். அவரது கூக்குரல் கேட்டு, காப்பாற்றும் நோக்கில் மகன்கள் கண்ணன், கார்த்தி,

அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த பரமசிவம், லக்ஷ்மிகாந்தன் மற்றும் வடமாநில இளைஞரான சுரதாபிசி ஆகிய ஐந்துபேரும் ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.

ஆறு பேருமே விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் சரவணன், தகுந்த நபர்கள், தகுந்த பாதுகாப்பு உபகரணங்களோடு மட்டுமே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கவோ, பரிசோதிக்கவோ முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்தவுடன் அது மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் என்றும் சார் ஆட்சியர் சரவணன் கூறினார்.