காரைக்காலில் மாங்கனித் திருவிழா : பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு..

காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு நடத்தினர்.

இறைவன் சிவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ,காரைக்கால் அருள்மிகு சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பாக ஆனி மாதத்தில் ஆண்டு தோறும் மாங்கனித்திருவிழா நடைபெறும்.

முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா இன்று நடைபெற்றது. இந்த வீதியுலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்த வழிபட்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திருவிழாவில் மாப்பிள்ளை (பரமத்தர்)அழைப்பு நடத்தப்பட்டு நேற்று காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்தல் நடைபெறுகிறது.

திருமணம்,குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வேண்டுதல் செய்து மாங்கனிகளை பக்தர்களுக்கு கொடுப்பார்கள் வீடுகளின் மேல்தளத்திலிருந்து மாங்கனிகளை இறைப்பார்கள் அதை பக்தர்கள் பிடித்து தங்கள் வேண்டுதலை வைப்பார்கள்.

பிச்சாண்டவர் வீதியுலா பாரதியார் வீதி தொடங்கி கென்னடியார் வீதி, மாதா கோயில் வீதி,லெமேர் வீதி வழியாக காரைக்கால் அமை்மையார் கோயிலை இன்று மாலை பிச்சாண்டவர் சென்றடைவார். அவருக்கு காரைக்கால் அம்மையார் வரவேற்கும் வைபவம் நடைபெறும் அப்போது மாங்கனி வைத்து அமுது படையல் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுவார்கள்