காரைக்குடியில் கம்பன் திருவிழா :தெலுங்கான ஆளுநர் டாக்டர் தமிழிசை பங்கேற்பு..

காரைக்குடியில் வருடம் தோறும் வெகு விமர்சையாகக் கம்பன் திருவிழா காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெறும், இந்தாண்டு நேற்று 16.03.22 அன்று காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு,கிருஷ்ணா மண்டபத்தில் 84-ஆம் ஆண்டு கம்பன் திருவிழா தொடங்கியது.
விழாவில் தெலுங்கான ஆளுநரும்,புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசைசௌந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கம்பன் திருவிழாவை கோவிலுார் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை உரையுடன், கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


விழாவில் சிறப்புரையாற்றி பேசிய டாக்டர் தமிழிசை தனது தந்தை குமரி ஆனந்தனுக்கும் கம்பன் விழாவில் பலமுறை உரையாற்றியதைப் பற்றித் தெரிவித்தார். மேலும் அவர் சீதை செந்துாரத்தை நெற்றி வகுட்டில் வைத்திருப்பதைப் பற்றி அனுமன் சீதையிடம் கேட்டார். அதற்கு சீதா தேவி செந்துாரம் ராமனுக்கு மிகவும் பிடிக்கும் என்றார். உடனே அனுமன் தனது உடல் முழுதும் செந்துாரத்தைப்பூசி காவிமயமாகக் காட்சியளித்தாராம், ராமனுக்குப்பிடித்த காவி தமிழகம் முழுவதும் வியாபித்து இருக்க வேண்டும் அதன் தொடக்கம் தான் சீதையின் நெற்றி வகுட்டில் உள்ள செந்துாரம் போல் காரைக்குடி கம்பன் விழா என்றார். கம்பன் தனது காவியத்தில் ராமனை தாமரை மலருக்கு ஒப்பாக வைத்து பாடியுள்ளார். ஓரிதழ் தாமரை ஒருநாளும் வாடாது என்பதால்தான் ராமனை தாமரை மலருக்கு ஒப்பாக கம்பன் கூறியுள்ளார் என்றார். கம்பன் புகழ் தமிழகமெங்கும் பரவ வேண்டும் என்று பேசினார்.


முன்னதாக உலகம் முழுவதும் உள்ள கம்பன் கழகங்களை ஒன்றிணைத்து இணைந்து செயல்படும் விதமாக கம்பன் கலைக்கூடம் அமைக்கப்படும் என்றும் அதற்கான இடத்தை கோவிலுார் ஆதீனகர்த்தா வழங்குவதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பை சொன்னவுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழறிஞர் ரூ.ஒரு லட்சம் நன்கொடை தருவதாக தெரிவித்தார். பொன்னமராவதி அறமனச்செம்மல் அரு.வே.மாணிக்கவேலு ரூ.ஒரு லட்சம் தருவதாக தெரிவித்தார்.
விரைவில் கம்பன் கழகங்கள் ஒருங்கிணைந்து இயங்கும் கம்பன் கலைக்கூடம் அமையவிருப்பதை தமிழ் ஆர்வலர்கள் மகிழ்வுடன் வரவேற்றனர்.
இன்று 2-ஆம் நாள் விழா வெகுக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்