பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெற்ற காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மாணவர்கள்..

காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி வாங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த பாதபூஜை நிகழ்வில் புதுவயல் மற்றும் காரைக்குடி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக திருவாடானை அரசு கலை கல்லுாரி தமிழ்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் பழனியப்பன் மற்றும் கீழச்செவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மை ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்திரான பேராசிரியர் பழனியப்பன் தனது உரையில் தாய்,தந்தை இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு உயிராகவும்,உடம்பாகவும் உள்ளனர். அடுத்ததாக ஆசிரியர்கள் உள்ளனர். அதனால்தான் மாதா,பிதா,குரு பின்னரே தெய்வம் என்று கூறுகிறோம். ஆகவே மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களை மதித்து நடந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் கண்ணன் சர்மா அவர்கள் பாதபூஜை நிகழ்ச்சியை நடத்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். மாணவ,மாணவியர்கள் அனைவரும் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

இவ் விழாவில் காரைக்குடி வித்யாகிரி பள்ளியின் முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார், லதா கிருஷ்ணன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்