கொல்கத்தா : பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேரணியில் கலவரம்…

கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவின் பிரசார பயணத்தில் மோதல் மூண்டது. கற்கள் வீசப்பட்டன,வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். இதே போன்று அவர் கொல்கத்தாவின் எஸ்பிளனேடில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

தொண்டர்கள் புடைசூழ அவர் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்திற்கு முன்னால் ராமர், லட்சுமணன், அனுமன் வேடமிட்டவர்கள் ஒரு வாகனத்தில் வந்தனர்.

மேள, தாளங்கள் முழங்க, மலர் மாரி பொழிய அமித்ஷா வாகன பேரணி நடைபெற்றது. சுமார் பத்தாயிரம் கிலோ மலர்கள் பா.ஜ.கவினர் தூவியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முக்கிய வீதிகளின் வழியாக பேரணி சென்ற போது ஓரிடத்தில் அவரது வாகனத்தின் மீது கட்டைகளும் கற்களும் வீசப்பட்டன. இதனால் பேரணியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே பா.ஜ.க.வினர் அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மீது கற்களை வீசியும், கட்டைகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரத்தில் இருந்த வாகனங்களுக்கு சிலர் தீ வைத்தனர். வாகனங்கள் பற்றி எரிந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.

பதற்றம் அதிகரித்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பற்றி எரிந்த தீயையும் போலீசார் அணைத்தனர்.