முக்கிய செய்திகள்

மம்தா விவகாரம் – மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் மாநிலத் தலைவர்கள்

மத்திய அரசை எதிர்த்து, அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் மம்தா பாணர்ஜி தொடங்கி நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு குவிகிறது. மத்திய அரசு சிபிஐ-யை தவறாக பயன்படுத்துவதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக – அலைபேசி வழியாக….

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் விதமாகவும் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலும் பாசிசப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய பாசிச பா.ஜ.க அரசை எதிர்த்து தாங்கள் நடத்தி வரும் அறப் போராட்டத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது முழு ஆதரவை அளிக்கிறேன்.  அத்துடன், மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சியின் எதேச்சாதிகார நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளோடு, தி.மு.க.வும் இணைந்து போராடும். தங்களை இன்று நேரில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தி.மு.கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, எம்.பி.,  ஆதரவு அளித்திட உள்ளார்.

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி தலைவர் :

மேற்கு வங்கம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதைக் காண முடிகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், சிபிஐ-யை மத்திய அரசு உள்நோக்கத்துடன் பயன்படுத்துகிறது. இதை நான் மட்டுமில்லை, பிற கட்சிகளும் கூறுகின்றன.  முதலில் சிபிஐ இயக்குநரை நியமிப்பதில் சர்ச்சை. இப்போது மற்றவர்களை மிரட்டுவதற்கு சிபிஐ-யை பயன்படுத்துகிறது பாஜக அரசு.

பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு காஷ்மீர்

மம்தா பாணர்ஜி கூறுவது சரிதான். பாஜக ஆட்சியில் நாடு பெரும் சர்வாதிகார அபாயத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். இவர்கள் அல்ல.

அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர், டெல்லி

எது எப்படி இருந்தாலும், மேற்கு வங்கத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் அச்சுறுத்தலை அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது. மாநிலத்தில் உள்ள அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. மோடி அரசு மாநில அரசு உயரதிகாரிகளை மிரட்ட இதுபோல் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை அனுப்புவது, நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல.

குலாம்நபி ஆசாத், காங்கிரஸ்

பாஜகவினர் ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி அழிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர். பாஜகவை விட ஊழல் மிகுந்த வேறு கட்சி இல்லை.

சஞ்சய் ரவுத், சிவசேனா

ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சரே போராட்டத்தில் குதித்திருப்பது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவது நாட்டின் கௌரவதத்தை மட்டுமின்றி, அந்த அமைப்பையும் மாண்பையும் பாழ்படுத்துவதாகும்.

தேவகவுடா, முன்னாள் பிரதமர்

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவின் மாநகர காவல் ஆணையரை சிபிஐ கைது செய்யச் சென்றதைப் பார்த்தோம். இது எமர்ஜன்சி காலத்தை விட மோசமான நடவடிக்கையாக இருக்கிறது. பிரதமர் மோடி சிபிஐ-யை நாள் முழுவதும் தவறாகவே பயன்படுத்தி வருகிறார். இது அவரது வெற்றிக்கு எந்த வகையிலும் உதவாது.

சஸ்மித் பாத்ரா, பிஜூ ஜனதா தள்

இந்தியா ஜனநாயகத்தில் முதிர்ச்சியடைந்த நாடு. அதற்குரிய பக்குவத்துடன் சிபிஐ நடந்து கொள்ள வேண்டும். ஒடிசாவிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரும், தற்போதும் சிபிஐ இதேபோன்று தவறாக பயன்படுத்தப்பட்டது.