மதுரை ஆவின் பாலகங்களில் கால் லிட்டருக்கு ₹2.50 திடீர் விலை உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி..

ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து அத்தியாவசிய தேவையான பால் வினியோகத்தில் தனியாரை விட அரசு சார் நிறுவனமான ஆவின் வினியோகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வழக்கமான விற்பனையை விட 40 சதவீதம் வரை கூடுதலாக விற்பனையாகும் அளவிற்கு ஆவின் தயாரிப்புகளை வாங்குவோர் அதிகரித்ததாக கூறப்படும் நிலையில்,

மதுரையில் ஆவின் பாலகங்களில் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக தனியார் தொலைக்காட்சி சானல் தகவல் வெளியிட்டுள்ளது

மதுரை பழங்காநத்தம் உழவர்சந்தை பகுதியில் உள்ள பூத் எண் 543 ல் நேரடியாக களமிறங்கிய போது,

அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் பால், தயிர், மோர், நெய் என அனைத்து ஆவின் தயாரிப்பிற்கும் கால் லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 பைசா வீதம் கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டது தெரியவந்தது.

ஆனால் விற்கப்படும் பொருள் அடைக்கப்பட்டு கவரில் உள்ள உண்மையான விலை குறித்து கேட்ட போது,

அது பழைய கவர் என்றும் தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேதியோடு அச்சாகி வரும் கவரை பழைய கவர் என்று கூறியும், விலை ஏற்றப்பட்டுள்ளதாகவும் கூறி பகல் கொள்ளையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

இதே பாணியை தான் மதுரை ஆவின் பாலகங்கள் பின்பற்றி வருகின்றன.ஊரடங்கில் வேலை வாய்ப்பின்றி இருப்பதை வைத்து சமாளிக்க மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை இருப்பதால்தான் தனியார் தயாரிப்புகளை விட விலை குறைவான ஆவின் தயாரிப்புகளை இந்த காலகட்டத்தில் நாடி வருகின்றனர்.

ஆனால் அங்கும் மக்களிடம் கூடுதல் விலை வசூலிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்று உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஆவின் வினியோக பிரிவு அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆவினின் எந்த தயாரிப்பும் விலை ஏற்றம் செய்யப்படவில்லை என்றும், பழைய கவர் உபயோகிப்பதாக கூறுவதும் தவறான தகவல் என்றும் கூறினர்.

ஒவ்வொரு ரூபாயும் முக்கியமாக கருதப்படும் இந்த காலகட்டத்தில் உரிய விலையை உறுதி செய்ய ஆவின் நிர்வாகமும் அதன் தலைவரான மாவட்ட ஆட்சியரும் முன் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.