மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட் 2022” போட்டி..

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது “செஸ் ஒலிம்பியாட் 2022” நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2022-ஆம் ஆண்டுக்கான போட்டியை போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்த நிலையில், போட்டியை தங்கள் நாட்டில் நடத்த பல நாடுகள் முயற்சித்தன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட், 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற வுள்ள 2022 செஸ் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்