மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் பவுலர்கள் அசத்த இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி மெல்போர்னில் (‘பாக்சிங் டே’ டெஸ்ட்) நடந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 443/7 (‘டிக்ளேர்’), ஆஸ்திரேலியா 151 ரன்கள் எடுத்தன. இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 106/8 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 399 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, நான்காம் நாள் முடிவில், 8 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.

கம்மின்ஸ் (61), லியான் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.

பும்ரா ‘வேகத்தில்’ கம்மின்ஸ் (63) சிக்கினார். இஷாந்த் வீசிய அடுத்த ஓவரில் லியான் (7) சிக்க, இந்திய கேப்டன் கோஹ்லி துள்ளிக்குதித்தார்.

முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.இதன் மூலம், இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜனவரி 3ல் சிட்னியில் துவங்குகிறது.