3-வது முறையாக ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிக்கு தகுதிபெற்ற மீராபாய் சானு..

தாய்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்குரிய தகுதி சுற்றான பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் கலந்து கொண்டார். அவர் ஸ்னாட்ச் முறையில் 81 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என்று மொத்தம் 184 கிலோ எடை தூக்கி தனது ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையை மீராபாய் சானு நிறைவு செய்து விட்டார். பளுதூக்குதல் தகுதி சுற்று வருகிற 28-ஆம் தேதி முடிவடைகிறது. அப்போது ஒவ்வொரு எடைப் பிரிவிலும் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதில் மீராபாய் சானு இடம்பெறுவார். இதன்மூலம் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மீராபாய் சானு, இடுப்புப் பகுதியில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்விலிருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது இந்தப் போட்டியில் களம் கண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு. இப்போது ஏறக்குறைய அதை எட்டி விட்டேன். காயத்தில் இருந்து குணமடைந்த பிறகு திரும்பிய இந்த போட்டியில் எனது செயல்பாடு திருப்தி அளித்தது. திடமான நம்பிக்கையுடன் இந்த போட்டியில் இருந்து கிளம்புகிறேன்” என்றார்.