பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் சிவப்புக் கம்பள உற்சாக வரவேற்பு..

பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் இன்று வங்கதேசம் சென்றார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக தலைநகர் டாக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவின் புதிய போயிங் 777 விமானத்தில் பிரதமர் மோடி இன்று வந்து இறங்கினார். வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா, விமான நிலையத்துக்கு வந்திருந்து பிரதமர் மோடிக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
சமீபத்தில் இந்தியா சார்பில் பிரதமர், குடியரசுத் தலைவர் பயணிப்பதற்காக போயிங் 777 விமானம் வாங்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக வெளிநாடு சென்றார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடியும், பிரதமர் ஷேக் ஹசினாவும் ஏற்றுக்கொண்டனர்.

பிரதமர் மோடி வங்கதேசம் புறப்படும் முன் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் முதல் முறையாக வெளிநாடு செல்வதில், அதிலும் குறிப்பாக அண்டை நட்பு நாடான வங்கதேசத்துக்குச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய அண்டை நாட்டுக் கொள்கையில் முக்கியமான தூணாக இருப்பது வங்கதேசம். இரு நாடுகளும் நட்புறவை ஆழமாகக் கொண்டு செல்வோம். வங்கதேசத்தின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் இந்தியா வழங்கும்” எனத் தெரிவித்தார்.

டாக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சாவர் நகரில் இருக்கும் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின் தான்மாண்டி பகுதியில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கிருந்து செல்லும் பிரதமர் மோடி, தேசிய படைச் சதுக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் ஷேக் ஹசினாவுடன் இணைந்து பங்கேற்கிறார்.

இன்று மாலையில் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் இணைந்து பங்கபந்து-பாபு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நாளை, கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள துங்கிபாராவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிடுகிறார். இங்கு செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், சத்கிரா பகுதியில் உள்ள ஜேஸ்ஹோரேஸ்வரி மற்றும் ஓர்காண்டி கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்துகிறார்.

நாளை பிற்பகலில் பிரதமர் ஷேக் ஹசினாவைச் சந்தித்துப் பிரதமர் மோடி பேச உள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு திட்டங்கள் கையொப்பமாகும் எனத் தெரிகிறது. நாளை தாயகம் புறப்படும் முன் அதிபர் ஹமித்துடன் சந்திப்பை முடித்துவிட்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.