நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது ..

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு சுமார் 11 மாதங்களுக்கு பிறகு தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.

விசாரணைக்க இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தர கூடாது என நிர்மலாதேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை விதித்துள்ளது.

நீதிபதிகள் கிருபாகரன் – சுந்தர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து நிர்மலாவிற்கு ஜாமின் வழங்கியுள்ளது.

நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசு தரப்புக்கு எந்த தடையும் இல்லை என கூறி அரசு தரப்பு ஆட்சேபணை ஏதும் தெரிவிக்காததால் நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் விடுவிக்கக்கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்ப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனையடுத்து நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் மதுரை காமராஜர் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதாக ஏப்ரல் 23ம் தேதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.

இதேபோல் முருகன் மற்றும் கருப்பசாமியும் தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த வழக்கில் பல்வேறு முக்கிய நபர்கள் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் கூறி வந்தனர். இதனிடையே தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி நிர்மலா தேவி,

கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் பலமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

இதையடுத்து கருப்பசாமி மற்றும் முருகன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்., 14ம் தேதி இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நிர்மலா தேவியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட்டிருந்தது.

நிர்மலா தேவி தொடர்பான வழக்குகளையும் அவர் ஜாமீன் மனுக்களையும் இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.