முக்கிய செய்திகள்

நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!

தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்..

பாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம் செல்வாக்கைப் பெற்று, நாட்டின் மிக முக்கியமான ராணுவ அமைச்சர் பதவியைப் பெற்றவர் நிர்மலா சீதாராமன். தமிழக விவகாரங்களில் தமிழர்களின் உணர்வை கிள்ளுக்கீரையாக மதித்து அறிவு ஜீவித் தனமாக பேசி நக்கலடிப்பவர் நிர்மலா சீதாராமன். அப்படிப்பட்ட அதி புத்திசாலியான நிர்மலா சீதாராமன்., ஓபிஎஸ் விவகாரத்தில் சிக்கியது எப்படி என சில ஏடுகளில் தகவல்கள் வந்துள்ளன. அதைப் பார்ப்போம்…

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கட்கிழமை திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு, அவரது ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி வீட்டில் தங்கினார். பின்னர் செவ்வாய் கிழமை மதியம் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் எம்பி, செம்மலை ஆகியோருடன் டெல்லியில், விஜய்சவுக் பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றார். துணை முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீண்ட நேரம் அங்கு காத்திருந்த சுமார் 45 நிமித்துக்கு மேல் காத்திருந்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நிர்மலா சீதாராமன் தன் அறைக்கு அழைக்கவில்லை. இறுதியில் மைத்ரேயன் எம்பியை மட்டும் உள்ளே அழைத்து 5 நிமிடம் வரை பேசிவிட்டு, மற்ற யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறி திரும்ப அனுப்பி விட்டார்.

தமிழக துணை முதல்வரும் மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் மட்டுமின்றி டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திக்க மறுத்ததை தொடர்ந்து, டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, “எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று எங்களுக்கு அண்ணா அன்றைக்கே கற்றுத் தந்திருக்கிறார்” என்று சோகமாக பதில் அளித்தார். இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க மறுத்தது ஏன்?

 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் மதுரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தால் கூடுதல் நேரம் ஆகும் என்பதால், விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு அவசரமாக ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் விமானத்துக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ். இதை ஏற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமனும், உடனடியாக சிறப்பு ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மதுரையில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். முதல்வர் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள ஒருவருக்குதான் ராணுவத்தின் ஏர் ஆம்புலன்ஸ் வசதி முறையான நடவடிக்கைகளுக்கு பிறகு வழங்கப்படும். 

ஆனால் ஒரு தனிப்பட்ட, கேபினட் அந்தஸ்த்து உள்பட எதுவும் இல்லாத நபருக்கு வழங்க இந்திய ராணுவத்தில் இடமில்லை. அதையும் மீறி தன் சொந்த செல்வாக்கில் மிகவும் ரகசியமாக நிர்மலா சீதாராமன் செய்து இருந்தார். இது ராணுவத்தை பொறுத்தவரை மிகவும் சீரியஸான விஷயம். எனவே, இந்த சம்பவங்கள் அனைத்தும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. வெளியில் தெரிந்தால், இந்திய ராணுவ அமைச்சகம் உதவி செய்தது வெளியில் தெரிந்து விடும் என்பதால் இந்த சம்பவம் பற்றி அப்போது யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அதேநேரம் தனது தம்பி உயிரை காப்பாற்ற ராணுவ விமானம் தந்து உதவிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேரில் நன்றி தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கள் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து ஓபிஎஸ் டெல்லி சென்றபோது, யாருக்கும் பேட்டி எதுவும் கொடுக்காமல் ரகசியமாக சென்றார். ஆனால், ஓபிஎஸ் டெல்லி சென்றது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று முன்தினம் நிருபர்கள் கேட்டபோது, அவர் உண்மையை போட்டு உடைத்து விட்டார். ராணுவ அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க ஓபிஎஸ் செல்கிறார் என்று கூறி விட்டார்.

இந்த செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்ததால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் கோபம் அடைந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்த சம்பவங்கள் வெளியே தெரிந்ததால் ஓ.பன்னீர்செல்வம் மேல் அதிக கோபம் ஏற்பட்டது. இந்தநிலையில்தான், நேற்று முன்தினம் நன்றி தெரிவிக்க நேரில் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்து விட்டார். மைத்ரேயன் எம்பியை மட்டும் நேரில் அழைத்து, நடந்த சம்பவத்தை சொல்லி, மிகவும் வருத்தம் அடைந்ததாகவும், தமிழகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே உள்ள சண்டையால் எனக்கும், இந்திய ராணுவ அமைச்சகத்துக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறி விடும்படி கூறியுள்ளார். இதையடுத்துதான் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையில், ராணுவ விமானத்தை தவறாக பயன்படுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ராணுவ விமானத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதனால் நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அமமுக கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மீது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்தநிலையில் அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

Nirmala Sitharaman stuck in critical position by EPS-OPS