வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் தேசத்தின் தூதுவர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் திறனை, திறமையை வெளிநாடுகளில் பறைசாற்றும் தூதுவர்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 15-வது பர்வாசி பாரதிய திவாஸ்(வெளிநாடு வாழ் மாநாடு) தொடங்கியது.

இந்த மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வந்துள்ளனர்.

இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

”என்னைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை இந்தியாவின் எண்ணங்களை வெளிப்படுத்தும் தூதுவர்களாகப் பார்க்கிறேன். அவர்கள் இந்தியாவின் திறமையையும், திறனையும், உலகிற்கு வெளிப்படுத்தும் தூதுவர்கள்.

இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் பல்வேறு நாடுகளில் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள்.

குறிப்பாக மொரிஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்தியர்கள் முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களுக்கு அரசு செலவு செய்யும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டும் சென்று சேர்கிறது.

மற்றவற்றை இடையில் இருப்பவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று அந்தக் கட்சியின் முக்கியமான ஒருவரே தெரிவித்திருந்தார்.

ஏறக்குறைய 85 சதவீதம் கொள்ளையடிக்கப்பட்டது. தொழில்நுட்ப முன்னேற்றம் வந்ததற்குப் பின் 100 சதவீதமும் கொள்ளையடிக்கப்பட்டது.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடியை பல்வேறு திட்டங்கள் வாயிலாக வழங்கி இருக்கிறோம்.

அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அளித்திருக்கிறோம். பழைய முறையில் ஒருநாட்டை நிர்வகித்து இருக்க முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்.

ரூ.4.50 லட்சம் கோடி காணாமல் போய் இருக்கும்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்குச் சென்று சேரும் பணம், இடைத்தரகர்களுக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய அரசுகள் இதைச் செய்திருக்கலாம், ஆனால், நோக்கமும் இல்லை, சக்தியும் இல்லை.

நேரடி மானியத் திட்டம் மூலம் மக்களுக்கு அவர்களுக்கு உரிய பலன்களை நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத் பேசுகையில், ”பிரதமர் மோடியின் திறன் இந்தியா, பெண் குழந்தைகளைக் காப்போம், மாற்று எரிசக்தி போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

மொரிஷியஸில் அடுத்த ஆண்டு போஜ்புரி பண்டிகையும், அடுத்த மாதம் பகவத் கீதா மகோத்சவமும் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.