முக்கிய செய்திகள்

ஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்

 

கி. கோபிநாத், பத்திரிகையாள

அதிக எடையின் (Over Weight) அடுத்த நிலைதான் உடல் பருமன் (Obesity). பேன்ட் திடீர்னு டைட் ஆயிடுச்சா, இரண்டு மாடி ஏறினா மூச்சு முட்டுதா, அப்ப நீங்க உடல் பருமனின் முதல் நிலையில் இருக்கிறீர்கள். சின்ன வயசுல நாம பாத்த அண்ணன்கள், மாமாக்கள் எல்லாம் ஸ்லிம்மா இருந்தாங்க. ஆனா இப்ப நாம பார்க்கிற நூத்துல 80 பேர், பேறுகால பெண்கள் போல வயிறு பெருத்து காணப்படறாங்க. இதுக்கு காரணம், உணவுப் பழக்க வழக்கம், உடற் பயிற்சி இல்லாதது.

இதனால் வரும் ஒபிசிட்டிதான் அனைத்து நோய்களுக்கும் மூலம். நீங்கள் ஒல்லியா, அதிக எடை கொண்டவரா, உடல் பருமன் உடையவரா என்பதை Body Mass Index (BMI) மூலம் கணக்கிடலாம். (உயரம், எடையை வைத்து இதை கணக்கிட நிறைய ஆப் உள்ளது, எனவே மூளையைப்போட்டு கசக்க வேண்டாம்). BMI 30-க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் உடல் பருமனானவர்கள். BMI 25 முதல் 29.9 வரை இருந்தால் அதிக எடை கொண்டவர்கள். சிம்பிளான வழி, இன்ச் டேப் மூலம் தொப்புளைச் சுற்றி அளவெடுங்கள், ஆண்களுக்கு 90 செ.மீ, பெண்களுக்கு 80 செ.மீ. இருந்தால் ஒபிசிட்டி. அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன், ஒபிசிட்டியை நோய் என்று வகைப்படுத்துகிறது.

ஒபிசிட்டி ஏற்படக் காரணம்

தசைக்கு கீழேயும், உடல் உறுப்புகளுக்கு மேலேயும் கொழுப்பு படிவதே அதிக எடைக்கும், உடல் பருமனுக்கும் காரணம். அதிக கொழுப்பு மற்றும் கலோரி உள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, தூக்கமின்மையால் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் பசி ஏற்பட்டு அதிக கலோரி உணவை உண்ணுதல், மரபு வழி பருமன், வளர்சிதை மாற்ற விகிதம் குறைதல், பேறுகால உடல் பருமன் ஆகியவையே ஒபிசிட்டிக்கான காரணங்கள்.

சில மருத்துவ ரீதியான காரணங்களும் உண்டு. பெண்களுக்கான இனப்பெருக்க ஹார்மோன் சமநிலை மாறுதல், பிறப்பிலிருந்தே எப்போதும் பசியுடனே இருப்பது, உடலில் ஹார்மோன் கோர்டிசால் அதிகரிப்பு, தைராய்டு சுரப்பியானது முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யாமலிருப்பது, கீல்வாதம் அதாவது Osteoarthritis. (இதனால் உடல் உழைப்பு குறைந்து உடல் பருமன் அதிகமாகும்). அத்துடன் மரபு, சூழல், உளவியல் காரணிகள் போன்றவையும் உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. மரபு ரீதியாகவே சிலருக்கு உடல் பருமன் இருக்கும், இவர்கள் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.

சூழல், சமூகம் எவ்வாறு காரணமாகிறது?

உணவுப் பழக்க வழக்கம், உடலுழைப்பு போன்றவற்றை தீர்மானிப்பதில், வீடு, பள்ளி, அலுவலகம், நாம் வசிக்கும் சூழல் போன்றவை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சத்தான உணவை சமைக்க கற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் அல்லது தினமும் புஷ்டியான உணவை சமைத்து சாப்பிட பொருளாதாரம் இடம் கொடுக்காமல் இருக்கலாம். சூழல் பாதுகாப்பில்லாதது என நீங்கள் உணரும் தருணத்தில், விளையாட்டு, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவற்றை இழக்க நேர்ந்து உடல் பருமன் ஏற்படும்.

உளவியல் மற்றும் சில காரணிகள்

பலருக்கும், உடல் எடை அதிகரிக்க மன அழுத்தம் காரணமாகிறது. மன அழுத்தத்தை குறைக்க சாப்பிடும் மாத்திரைகளும் உடல் எடையைக் கூட்டிவிடும். மது, அதனுடன் எடுத்துக்கொள்ளும் கலோரி நிறைந்த சைட் டிஷ்கள், புகை பிடிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆனால், இதுவும் உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுவதுண்டு. ஏனெனில் உடலானது ஆல்கஹால், நிகோடின் கேட்கும்போது, அதை தவிர்க்க கிடைத்ததை சாப்பிடுவோம். இதைக் கட்டுப்படுத்த உணவு மற்றும் உடற்பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஸ்டீராய்டுகள், கர்ப்பமாவதைத் தடுக்க எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் ஒபிசிட்டியை ஏற்படுத்தும்.

கண்டறியும் முறை

ஒபிசிட்டியை BMI மூலம் கணக்கிடுவது முதல்படி. துல்லியமாக அறிய வேண்டும் என்றால், அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்த சோதனை, லிவர் ஃபங்ஷன் டெஸ்ட், சர்க்கரை சோதனை, தைராய்டு சோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் போன்றவற்றில் மருத்துவர்கள் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ பரிந்துரைப்பார்கள்.   

ஒபிசிட்டி பாதிப்புகள் என்னென்ன?

இடுப்பைச் சுற்றி சதை தொங்கத் தொடங்கினாலே ஒபிசிட்டியுடன் தொடர்புடைய நோய்கள் வரத் தயாராகின்றன என அர்த்தம். தசைகளில் சேரும் அதிகக் கொழுப்பானது, எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு, இயற்கைக்கு மாறாக அதிக வேலை கொடுத்து பலவீனமடையச் செய்கிறது. டைப் 2 டயாபடீஸ், இதய நோய், அதிக ரத்த அழுத்தம், மார்பகம், பெருங்குடல், கருப்பை புற்றுநோய், பக்கவாதம், பித்தப்பை பாதிப்பு, ஃபேட்டி லிவர் அதாவது கல்லீரல் பெருத்துவிடுவது, கொலஸ்ட்ராஸ் அதிகரிப்பு, தூக்கத்தில் மூச்சுத் திணறுவது, சுவாசப் பிரச்னை, கீல்வாதம், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, செரிமானக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

இதில் ஃபேட்டி லிவர் என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படுவது. இதை கண்டுகொள்ளாமல் விட்டால் பாதிப்பு அதிகமாகும். வரும் காலங்களில் பெரும்பாலானோரின் கல்லீரல் செயலிழப்புக்கு ஒபிசிட்டி முக்கிய காரணமாக இருக்கப்போகிறது என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.  

எடை குறைக்க என்ன செய்யலாம்?

வாழ்வியல் முறையில் மாற்றம், உடற்பயிற்சி, சமச்சீரான உணவு போன்றவை மூலம் எடையைக் குறைப்பதே அறிவியல்பூர்வமாக ஏற்கப்பட்ட வழி. மருத்துவமுறை என்று எடுத்துக்கொண்டால், இயற்கை மற்றும் மரபு வழி மருத்துவங்களில் சிகிச்சை உண்டு. இதற்கெல்லாம் முடியாதவர்களுக்கு அலோபதி மருத்துவ முறையில், உடற்பயிற்சி, உணவு முறை மாற்றங்களுடன், மருத்துவர்கள் சில மாத்திரைகளை கொடுப்பார்கள். இந்த மாத்திரைகள் நரம்பு மண்டலம் மற்றும் இருதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை மூலமாகவும் உடலில் சேர்ந்த கொழுப்பை நீக்கி உடல் எடையைக் குறைக்கிறார்கள். இது சிக்கல் நிறைந்தது. BMI 40-க்கும் மேல் அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.

ஒபிசிட்டி வராமல் தடுப்பது எப்படி?

அன்றாட வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்கள், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி (நடை, ஓட்டம், நீச்சல், சைக்ளிங் இவற்றில் ஒன்று), பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதம் குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவற்றின் மூலம் உடல்பருமன் மற்றும் ஒபிசிட்டியில் இருந்து தப்பலாம். அதிக கொழுப்புள்ள உணவுகள், அதிக கலோரி நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஒபிசிட்டியால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு

ஒபிசிட்டியால் பாதிக்கப்படும் இந்திய இளைஞர்களின் விகிதம் 2014-ல் 3.7 ஆக இருந்ததாகவும், 2025-ல் அது 5 சதவிகிதமாக உயரும் எனவும் உலக ஒபிசிட்டி ஃபெடரேஷன் எச்சரிக்கிறது. இதை பெரிய பிரச்னையாக அரசு கருதாதது துரதிருஷ்டம். சராசரியாக இந்தியாவில் 5-ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதெல்லாம் குழந்தை பருவத்திலேயே உடல் பருமன் ஆரம்பித்துவிடுகிறது. 20-25 வயதில் உடல் பருமன் ஆரம்பித்து விடுகிறது என்றால், அப்போதிலிருந்தே உள் உறுப்புகள் பாதிக்கத் தொடங்குகிறது என்று அர்த்தம்.

தாய்மார்கள் கவனத்துக்கு

பள்ளி, அலுவலக நாட்களில் பெரும்பாலான வீடுகளில் பெரும் பரபரப்பும், பதற்றமும் காணப்படும். சரியான திட்டமிடுதல் இல்லாததே இதற்குக் காரணம். அவசரகோலத்தில் நூடுல்ஸையும், பாக்கெட் சிப்ஸையும் பையில் வைத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்கள் அதிகம். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் கேடுதான். திட்டமிடுதல் இல்லாததால் ஏற்படும் மன அழுத்தம் பெற்றோரின் ஆரோக்கியத்தை கெடுக்கும். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற அறுசுவைகளையும் உணவுப்பழக்கத்தில் கொண்டு வருதல் நலம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்

என்கிறார் திருவள்ளுவர். முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றிய பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒரு தேவையில்லை என்பதே இதற்கு விளக்கம். எனவே உணவிலும், உடற்பயிற்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி, உடல் எடையை கட்டுக்குள் வைத்தால் நோய் பாதிப்புகளில் இருந்து தப்புவது நிச்சயம்.