பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக “கொரோனில்” என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.

ஆனால் மருந்தின் அறிவியல் ஆதாரங்களின் மீது சந்தேகம் எழுப்பப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவானது. இந்நிலையில் அந்த மருந்து “கொரோனில் கிட்” என்ற பெயரில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உலக சுகாதார நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கு எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் மதிப்பாய்வு செய்யவோ, ஒப்புதல் அளிக்கவோ இல்லை என்று ட்விட்டரில் விளக்கம் அளித்தது.

இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க, கொரோனில் கிட் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவருடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்து கொண்டார்.

பதஞ்சலி நிறுவனத்தின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ள இந்திய மருத்துவ சங்கம், பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்றால் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அரசு எதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்கிறது? நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர், இதுபோன்ற தவறான திட்டத்தை வெளியிடுவது எந்த வகையில் சரியான ஒரு அணுகுமுறை? என கேள்வி எழுப்பியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியப்பிரிவு நிர்வாக்குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நிராகரித்த மருந்தை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஒரு அவமானம் என்கிறது இந்திய மருத்துவ சங்கம்.