அமைதிக்கான சியோல் விருது :பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

2  நாள் அரசு முறைப்பயணமாக தென் கொரியா தலைநகர் சியோல் சென்றுள்ளார் பிரதமர் மோடி, அங்கு தென்கொரியாவின் அமைதிக்கான சியோல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும், இந்தியாவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன.

இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று தென்கொரியா சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

தனது சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

குறிப்பாக கொரிய போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி,

“தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் உறவில் பாதுகாப்புத்துறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. கே-9 வஜ்ரா பீரங்கி துப்பாக்கி இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும்.

புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்ததற்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆதரவு கொடுத்ததற்கும் முன் ஜே இன்னுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது கொள்கைகளை மேலும் முன்னெடுத்துச்செல்லும்” என்றார்.

இதைத்தொடர்ந்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, வர்த்தகம்,

முதலீடு உள்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.