“பெரியார் தமிழ் குடியின் பாட்டனார்” : காரைக்குடியில் ப.சிதம்பரம் பேச்சு..

காரைக்குடியில் மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் பரப்புரை நிகழ்த்திய போது

காரைக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்தியமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்தினார். அப்போது அவர் “பெரியார் தமிழ்குடியின் பாட்டனார்” என்று பேசினார்.
காரைக்குடி சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்., வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேரதல் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

குணசேகரன், திமுக நகர செயலாளர் காரைக்குடி

பொதுக்கூட்டத்தில் காரைக்குடி திமுக நகர செயலாளர் குணசேகரன் பேசும் போது திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள 528 பக்க தேர்தல் அறிக்கையின் படி மக்களுக்கு வரும் சூன் -3-ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் அன்று ஒவ்கொரு குடும்பத்திற்கும் ரூ.4000 வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக மக்கள் விரோத அரசு பாஜகவின் அடிமை அரசாக செயல்பட்டு வருகிறது. மக்கள் விரோத மற்றும் வேளாண் சட்டங்களை ஆதரித்து மக்களுக்கு துரோகம் செய்தது.

காரைக்குடியில் மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பொதுக் கூட்டம்


காரைக்குடி நகரை கடந்த 3 ஆண்டுகளாக பாழ்படுத்தி உள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் ஒருவர் அதில் விழுந்து இறந்தே போனார். சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி அவர்கள் சாலையில் அமர்ந்து பல மணி நேரம் கடும் போராட்டம் நடத்தினார் என்பது யாவரும் அறிந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் கல்லுாரி,சட்டக்கல்லுாரி அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. காவிரிக் கூட்டுக் குடிநீர் காரைக்குடிக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் மாங்குடி வெற்றி பெறப் பாடுபடுவோம் எனத் தெரிவித்தார்.

பழ.இராமசந்திரன், சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட்

சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பழ.இராமசந்திரன் பேசும் போது காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் மக்களின் முதுகு தேய்ந்து உடைந்ததுதான் மிச்சம். பாசஸிச பாஜக கட்சியை தமிழ்நாட்டில் கால் ஊன்ற விடக்கூடாது. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் அடையத் துடிக்கும் பாஜக வை புறக்கணிப்போம். கை சின்னத்தில் வாக்களித்து மாங்குடி அவர்களை வெற்றிபெறச் செய்வோம் என்று பேசினார்.

கார்த்தி சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

அடுத்து பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்கள்,விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருகிறது. இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கிறது. பாஜக குண்டர்கள் அரசு அதிகாரிகள் போல் செயல்படுகின்றனர். காவி வேஷ்டி கட்டி துறவி போல் நடித்து இன்று உத்திரப்பிரதேசத்தை ஆளும் யோகி தமிழகத்தில் நுழைந்தவுடன் வன்முறை அரங்கேற்றம் நடைபெறுகிறது.
எங்கும் இந்தியைத் திணிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாடினால் அதற்கு இந்தியில் பதிலளிக்கிறார் மத்திய அமைச்சர்.இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மக்களுடன் மக்களாக மக்கள் சேவைபுரிந்து வரும் எளிய மனிதர் மாங்குடி,சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக 2 முறை பணியாற்றியவர். மக்களின் தேவைகளை நன்கு புரிந்தவர்.உங்கள் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுபவர். இத்தகைய சிறந்த மனிதரான மாங்குடியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக உங்கள் முன் களம் இறக்கி இருக்கிறது. அவருக்கு “கை“ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். காரைக்குடி நகரில் கடந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் 17,000 வாக்குகள் அதிகமாக எனக்கு கிடைத்தது. இந்த முறை அதிக வாக்குகளைப் பெற்று மாங்குடி வெற்றியை உறுதி செய்வோம்.

தென்னவன், திமுக இலக்கிய அணிச் செயலாளர்

அடுத்த பேசிய திமுக இலக்கிய அணிச் செயலாளர் தென்னவன் பேசும் போது மொழி,இனம்,கலாச்சாரம்,பண்பாடு அனைத்தையும் சிதைக்க ஒரு கூட்டம் நம்மை நோக்கி வருகிறது. அடிமை ஆட்சியை நாம் அகற்ற வேண்டிய நேரமிது. நமது உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். மோடியின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்ற அடிமைகளைத் துாக்கி எறிவோம்.நமது வேட்பாளர் மாங்குடிக்கு “கை” சின்னத்தில் வாக்களியுங்கள்,கைபர்போலன் கணவாய்வழியாக வந்தவர்ககளைப் புறமுதுகிட்டு விரட்டுவோம் என்றார்.

வேட்பாளர் மாங்குடி

வேட்பாளர் மாங்குடி பேசும் போது மக்களின் தேவைகளை உடனிருந்து நிறைவேற்றுவேன், என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

ப.சிதம்பரம், முன்னாள் மத்தியமைச்சர்

இறுதியாக சிறப்புரையுடன் பரப்புரை மேற்கொண்டார் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் அப்போது அவர் தேசியமும்,திராவிடமும் தமிழகத்தில் ஒன்றாக வளர்ந்தது. அதன் கொள்கைகள் தனி என்றாலும் இணைந்தே வளர்ந்தன. தமிழகத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் காந்தி,நேரு, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய்படேல்,கமராஜர்,ராஜாஜி இருந்தனர். ஆர்எஸ்எஸ் சுதந்திரம் அடையும் முன் உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி யாரும் சிறை செல்லவில்லை அவர்களின் யோக்கியதை அவளவுதான்.

பெரியார் அனைவருக்கும் பாட்டனார் , எனக்கும் பாட்டனார் என்பதில் பெருமை கொள்வேன்.இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது ஈவேரா. ராமசாமி காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.அவர்தான் பகுத்தறிவை ஊட்டியவர். குழந்தை திருமணத்தை தடுத்தவர், பெண்களுக்காக போராடியவர். அவர் தமிழ்குடிக்கும் பாட்டனார் என்பது மறக்க முடியாது.

காரைக்குடியில் ஏ.எல். சுப்பையா அம்பலம், சுந்தரம்பிள்ளை, பி சுப்பையா அம்பலம்,வி.சுப்பையா அம்பலம், தியாகி தண்ணீர்மலை செட்டியார், தியாகி பரமசிவம், கம்பன் அடிப்பொடி சா.கணேசன் போன்றோர் தேசியத்தை வளர்த்தனர்.
அதுபோல. திராவிடத்தை வளர்த்த ராம சுப்பையா ,கார்ல்மார்ஸ் கருப்பையா,என்.ஆர்.சாமி, மரக்கடை ஆர்.சுப்பிரமணியம், சித.சிதம்பரம்,இராமநாராயணன் போன்றோர் வளர்த்தனர். இப்படி போற்றி வளர்த்த தமிழகத்தில் பாஜக எனும் விஷச் செடி வளரத் துடிக்கிறது. அதற்கு அதிமுக பல்லக்கு துாக்குகிறது.

அதிமுக மாநில கட்சி யோடு கூட்டணி சேர்ந்து நின்றிருந்தால் கூட பரவாயில்லை அவர்கள் பாஜகாவிற்குத்தான் பல்லக்கு துாக்குகின்றனர். பாஜக ஒரு விஷச் செடி என்பதை மறந்து விட்டனர்..

பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடி்கை, குடியுரிமை சட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்தது.
இருவரையும் புறக்கணிப்போம் உங்கள் வேட்பாளர் மாங்குடிக்கு “கை” சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.

செய்தி & படங்கள்

சிங்தேவ்