முக்கிய செய்திகள்

முதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்!: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு அடுத்த படியாக ஊடகங்களுக்குக் கிடைத்த அவல் ரஜினி. ரஜினிகாந்தைப் பொறுத்தவரை மக்களுக்கும் அவருக்கும் ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது. 90 கள் முதல் அவர் என்ன சொல்லி வருகிறாரோ, அதேபோல், மக்களும் அவரைப் பற்றி அப்போது கூறியதையே இப்போதும் கூறி வருவதுதான். “எப்போ வருவேன், எப்படி வருவேன்னு சொல்ல முடியாது.. .ஆனா வரவேண்டிய நேரத்திற்கு கரெக்டா வருவேன்”  என்பது அவருடைய வழக்கமான பிரகடனம். “ஆமா.. இவரு சொல்லிக்கிட்டே இருப்பாரு…. ஆனா வரமாட்டாரு…” மக்களின் வழக்கமான எதிர்வினை. இப்போதும், சற்று அழுத்தத்துடன் இரு தரப்பிலும் இந்தத் தொனியே தொடர்கிறது.   

தமிழகத்தில் மட்டுமல்ல, அண்டை மாநிலமான ஆந்திரத்திலும் கூட, நடிகர்களுக்கு நாடாளும் ஆசை வருவதற்கு எம்ஜிஆர் பெற்ற வெற்றிதான் காரணம். ஆனால், என்.டி.ராமாராவால் அதனைத்  தொடர முடியவில்லை. அண்மையில் நடிகர் சிரஞ்சீவியும் அத்தகைய ஒரு முயற்சியை எடுத்து தொடக்கத்திலேயே முடங்கி விட்டார். தமிழகத்தில் எம்ஜிஆரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யதார்த்தத்தை இன்னும் அவர்கள் உணர்ந்தபாடில்லை. எம்ஜிஆர் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது, தமிழக அரசியலும் உச்சத்தில் இருந்தது. அண்ணாவும், அதன் பிறகு கலைஞரும் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்து வந்த காலமது. எம்ஜிஆரும் திமுகவும் இரண்டறக் கலந்து வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் அடைந்த வளர்ச்சியின் ஒவ்வோர் அணுவிலும், திமுகவும், அண்ணாவும், கலைஞரும், அவர்களது தொண்டர்களும் இருந்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன்  இருவரது தொடக்க காலங்களில், அவர்களுக்கு வாய்ப்புப் பெற்றுத் தருவதில் கலைஞர் எந்த அளவுக்கு அக்கறை காட்டி இருக்கிறார் என்பதை சம்பந்தப்பட்ட இருவருமே பல முறை கூறியிருக்கிறார்கள். காரணம், எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் முன்னதாகவே, திரையுலகில் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றது கலைஞரின் வசனம்தான். பின்னர் தான், கலைஞரது நட்பும், திமுகவின் புரட்சி அடையாளுமுமாக சேர்த்து எம்ஜிஆர் பெரும் அரசியல் சக்தியாக வளர வழி வகுத்தது. கலைஞர் எதிர்ப்பாளர்கள் இந்த வரலாற்றை வசதியாக மறைத்துப் பேசுவது அனைவருமே அறிந்த ரகசியம்தான். இவை பழைய கதைதான். ஆனால், புதிய நீர்க்குமிழிகள் இவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஜனநாயக பேராற்றலாக வளர்ந்து விட்ட திமுகவை, மக்கள் மன்றத்தில் நேரடியாக எதிர்த்து அதன் எதிரிகளால் வீழ்த்த முடியவில்லை. அதற்கு வசதியாக கிடைத்த வசீகரமான ஆயுதம் தான் எம்ஜிஆர். ஆதிக்க சக்திகளும், பிராமணீயமும் இரண்டறக் கலந்து அவருக்கு பின்னணி பலமாக செயல்பட்டன. ஆம். திமுகவை வீழ்த்துவதற்கு அப்போது பல சக்திகளுக்கும் தேவைப்பட்ட தேவதையாக எம்ஜிஆர் அவதாரம் எடுத்தார். திமுகவின் மூலமாக எம்ஜிஆர் பெற்ற திரைச்செல்வாக்கை அந்தக் கட்சிக்கு எதிராகவே பயன்படுத்தினர். இதில் வெவ்வேறு அரசியல் அடையாளங்களைக் கொண்ட ஆதிக்க சக்திகளும், ஒற்றுமையாகவும், கவனத்துடனும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு செயல்பட்டனர். அதில் வெற்றியும் கண்டனர். எம்ஜிஆருக்குப் பிறகு மிக இயல்பாகவே அந்த இடத்தை ஜெயலலிதா நிரப்பினார். ஆனால், திமுகவுக்கும், கலைஞருக்கும் எதிராக இத்தகைய அரசியலைக் கட்டமைத்த ஆதிக்க சக்திகளே எதிர்பாராத அதன் பக்கவிளைவுகள்தான் சசிகலாவும், தினகரன் உள்ளிட்ட அதன் தொடர் விளைவுகளும். எம்ஜிஆரிடமும், ஜெயலலிதாவிடமும் எதிர்பார்த்ததை தினகரனிடம் அவர்களால் எதிர்பார்க்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆக, எம்ஜிஆரின்  அரசியல் யுகம், இத்தனை வலுவான பன்முக பின்னணிகளையும், அழுத்தமான அரசியல் வியூக  பின்னல்களையும் கொண்டது.

இந்தப் பின்னணிகளுடன் ஒப்பிட்டால், ரஜினிகாந்த் போன்றோர் அரசியலுக்கு வர ஆசைப்படுவதும், அல்லது அவர்கள் அழைக்கப்படுவதும் எத்தனை குழந்தைத் தனமானது என்பதை புரிந்து கொள்ள முடியும். சோ, சு.சாமி போன்றோருக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிக்க தமிழருவி மணியன் முயன்று வருகிறார். அண்மையில் சில ஆண்டுகளாக அவர் எடுக்கும் ஒவ்வொரு அரசியல் முயற்சியும், கலைஞர் என்ற தனிமனிதர் மீது உள்ள குரோத உணர்வின் வெளிப்பாடே தவிர, அதற்கு  கோட்பாட்டுக்கு ரீதியாக வேறு எந்தப் பொருளும் இல்லை. பாஜகவை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்தார். விஜயாகந்தை வரவேற்று அரசியல் வலை பின்னிப் பார்த்தார். இப்போது ரஜினிக்காக அந்த வேலையில் இறங்கி உள்ளார். இத்தனை ஆண்டுகாலம் இவர் முழங்கியதெல்லாம், ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவருவதற்குத்தானா என்ற கேள்வி எழும் போது, நமக்கே தலைகுனிவாக இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, வெறும் ரேட்டிங் பரபரப்புக்காக ரஜினி அரசியலுக்கு வருகிறார், அது குறித்து அறிவிக்கப் போகிறார் என்ற வண்ண, வண்ண மத்தாப்புப் பொய்களை சின்னத்திரையில் சிதற விட்டு வேடிக்கை காட்டும் ஊடகங்களின் போக்கு அதைவிட வேதனைக்குரியது. சமூகத்திற்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய ஊடகங்கள், அதனை விழிக்கவே விடாமல் அடிக்கும் மயக்க மருந்தாக வினைபுரியும் வெட்கக்கேட்டை என்னவென்பது?

தமிழகத்தில் வேறு தலைவர்களே இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா? நல்லகண்ணுவுக்கு இப்போது தானே 93 வயது ஆகிறது. அரசியல் தூய்மை பேசும் ஊடகங்களும் சரி, அறிவுஜீவிகளும் சரி இத்தனை ஆண்டுகளாக அவரைக் கண்டு கொள்ள வில்லையே! அவரது 80 ஆவது வயது பிறந்த நாளையும் கலைஞர் தான் தலைமை தாங்கி சிறப்பித்தார் என்பது வேறு செய்தி. ஸ்டாலின் திமுகவின் செயல்தலைவர் என்பதால் அவரை இவர்களுக்கு பிடிக்காது. சென்னையின் மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பல்வேறு ஆட்சி நிர்வாகத்தை சீராக நடத்திச் சென்ற அனுபவம் ஸ்டாலினுக்கு உண்டு என்ற உண்மையை இவர்களால் ஏற்க முடியாது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று (26.12.17) கட்டி ஆறே ஆண்டுகள் ஆன  நிலையில் ஒரு பாலம் இடிந்து இரண்டாக தொங்கும் செய்தி சில ஊடகங்களில் வெளியானது. ஊழலை எதிர்த்து உரத்துக் கூச்சலிடும் பாஜக ஆளும் மாநிலத்தின் லட்சணம் அதுதான். ஆனால், தமிழகத்திலும், சென்னையிலும் உள்ள பெரும்பான்மை பாலங்கள் கலைஞர் காலத்திலும், ஸ்டாலின் மேற்பார்வையிலும் கட்டப்பட்டவைதான். இதுவரை அவற்றில் ஒன்று கூட இந்த நிலைக்கு ஆளானதில்லையே! ஆனாலும் ஸ்டாலினை இவர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால் அவர் கலைஞரின் மகன். ஆதிக்கவாதிகளுக்கு எதிராக தன் காலம் முழுவதும் அரசியல் நடத்தியவரின் வாரிசு அவர். அதனால் இவர்களுக்கு ஸ்டாலினைப் பிடிப்பதில்லை. விட்டுவிடலாம். அதனைத் தாண்டி, கோட்பாட்டு ரீதியாக அரசியலைப் பேசியும் நடத்தியும் வரும் பலரும் இருக்கிறார்களே… திருமாவளவன், சீமான், அன்புமணி, வேல்முருகன் என அரசியலில் அடுத்த தலைமுறையாக பலரும் உருவாகி இருக்கிறார்களே! இப்போது தினகரன் வேறு உதயமாகி இருக்கிறார்.. இவர்களில் ஒருவரை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லலாமே… அதனைச் செய்ய விடாமல் எது தடுக்கிறது.. ஸ்டாலின் சரியாக செயல்படவில்லை என கிண்டலடிக்கும் இவர்கள் ரஜினி என்ற முதியவரை அரசியலுக்கு வரச் சொல்லி மல்லுக்கு நிற்பது ஏன்? காரணம் இல்லாமல் இல்லை. மேலே  நாம் பட்டியலிட்ட அனைவருமே, ஏதோ ஓர் இடத்தில் தமிழர் உரிமை, தமிழர் நலன் எனப் பேசக் கூடியவர்கள், ரஜினியைக் கொண்டு வந்துவிட்டால் அப்படி ஒரு கவலையே  தேவையில்லை. ஒரு போதும் அந்தக் குரல் அவரிடமிருந்து எழாது. ஆதிக்க வாதிகளுக்கு இதனை விட வேறு என்ன வசதி வேண்டும்? ரஜினி பஜகோவிந்தத்தின் பின்னணி இதுதான்.

தமிழ் மண்ணில் பிறந்து அதன் அரசியலை உணர்ந்து செயல்படும் பல தலைவர்கள் தற்போது களமாடிக் கொண்டிருக்கிறார்கள். இனியேனும், திரையுலகில் இருந்து தலைவர்களைத் தேடும் உளவியலைக் கட்டமைக்கும் கீழ்த்தரமான வேலையை ஊடகங்களும், பத்திரிகைகளும் கைவிட வேண்டும். உங்கள் விற்பனைக்கும், வியாபாரத்திற்கும் அவர்களை வேறு விதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரும் தடுக்கப் போவதில்லை. தயவுசெய்து அரசியலை விட்டு விடுங்கள்.

  Please leave Rajini….