இந்திய – ஜப்பான் ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் கையெழுத்து

இந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி, ஜின்சோ அபே இருவரும் கையெழுத்திட்டனர்.

13வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு பிரதமர் சின்சோ அபேயுடன், யமனாசியில் இருந்து டோக்கியோவுக்கு விரைவு ரயிலில் பயணித்தார்.

பின்னர் டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் மத்தியில் மோடி உரையாற்றினார். அப்போது, மனித இனத்திற்கு இந்தியா ஆற்றி வரும் சேவைகளைக் கண்டு உலக நாடுகள் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் 140 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100 ஆவது இடத்திற்கு முன்னேறி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ஜப்பான் முழு மனதுடன் ஆதரவளித்ததாகக் குறிப்பிட்ட மோடி, சுவாமி விவேகானந்தரையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் அந்நாடு ஆதரித்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டமானது உலக அடையாளமாக மாறி விட்டதாக கூறிய மோடி, மோட்டார் வாகனம் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பின் முனையமாக இந்தியா மாறி வருவதாகக் கூறினார்.

இந்திய கலாச்சாரம், இந்திய உணவுகளை ஜப்பானுக்கு கற்றுக் கொடுத்த இந்தியர்கள், உலகின் ஒவ்வொரு மூலைக்கும் வெளிச்சத்தைப் பரப்பும் ஒளியைப் போன்றவர்கள் எனப் புகழாரம் சூட்டினார்.

மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கூறிய அவர், ஒரு ஜி.பி. டேட்டாவானது, குளிர்பான பாட்டிலின் விலையைக் காட்டிலும் மலிவாக கிடைப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதன் பின்னர் டோக்கியோவில், இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபேயும் கையெழுத்திட்டனர். பின்னர், இருவரும் கையெழுத்திடப்பட்ட ஒப்ந்தக் கோப்புகளை பரஸ்பரம் மாற்றி வழங்கிக் கொண்டனர்.