முக்கிய செய்திகள்

வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி  தொகுதியில் போட்டியிடும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அப்போது உடனிருந்தனர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, பிஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார், சிரோன்மணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ்சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் உடனிருந்தனர்.

வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும்முன் பிரசித்தி பெற்ற கால பைரவர் கோயிலில் மோடி தரிசனம் செய்தார்.

பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பிரதமர் மோடி, திடீரென சாலையில் இறங்கி, நகரவாசிகளை சந்தித்தபடி சென்றார்.

அப்போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில பாரதிய ஜனதா தலைவர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோரும் பிரதமருடன் நடந்து சென்றனர்.

வாரணாசி தொகுதியில் மே மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவும் போட்டியிடுகின்றனர்.